ஜனாதிபதியிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி! ஜூன் 8-ல் மீண்டும் பிரதமராகும் மோடி!
டெல்லி: மத்தியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இருப்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. மேலும் ஜூன் 8-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவும் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை எந்த ஒரு கட்சியும் பெற முடியவில்லை. தற்போதைய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். அதற்கான ஆதரவை 16 இடங்களில் வென்ற சந்திரபாபு நாயுடுவும் 12 இடங்களில் வென்ற நிதிஷ்குமாரும் உறுதி செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகிய இருவரும் தங்களது தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவை இந்தியா கூட்டணிக்கு வழங்குவதாக அறிவித்தால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. இந்தியா கூட்டணி புதிய கூட்டணி ஆட்சியை அமைக்கும். இது தொடர்பாக ஏற்கனவே சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரிடம் பாஜக- இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இதனிடையே டெல்லியில் இன்று பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி ஆகியவற்றின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. பாஜகவின் ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் பங்கேற்கின்றனர். இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் பதவியில் இருக்கும் மோடி தலைமையில் நடைபெற்ற கடைசி அமைச்சரவைக் கூட்டம் இது.
இந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அமைச்சரவையைக் கலைக்கப் பரிந்துரை செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் ஜூன் 8-ந் தேதி மீணடும் பிரதமராக மோடி பதவியேற்கவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications