காங்கிரஸ் ஆட்சில பெட்ரோல் கலால் வரி ரூ.9.48தான்... ஆனால் இப்போ? வரி குறைப்பு ஏமாற்று வேலை -காங்கிரஸ்
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு மூலம் மத்திய அரசு மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தினசரி பைசா கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.
இந்த நிலையில் 4 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்கள் விலையை உயர்த்தாமல் இருந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 10 நாட்களாக மீண்டும் தொடர்ந்து விலையை உயர்த்தியது வாகன ஓட்டிகளை அவதியடைய செய்தது.

137 நாட்கள் உயராத விலை
137 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி நீடித்து வந்த இந்த விலை, கடந்த மார்ச் 22 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடும் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து ஒருமாதமாக விலையேற்றம் செய்யப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக சென்னையில் சென்னையில் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நிர்மலா சீதாராமன்
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக அவர் அறிவித்து உள்ளார். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படுகிறது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவா, "கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.48 ஆக இருந்தது. பாஜக அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.18.42 ஆக உயர்த்தியது. இன்று பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.27.90 ஆக இருக்கிறது. தற்போது 8 ரூபாய் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

வெற்று வாக்குறுதிகள்
2014 ஆம் ஆண்டு மே மாதம் டீசல் மீதான கலால் வரி ரூ.3.56 ஆக இருந்தது. பாஜக அரசு டீசல் மீதான கலால் வரியை ரூ.18.24 ஆக உயர்த்திவிட்டு தற்போது ரூ.6 குறைத்திருக்கிறது. இன்று டீசல் மீதான கலால் வரி ரூ.21.80. தற்போதும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரியை அதிகமாகவே உள்ளது. மக்களை ஏமாற்ற தேசத்துக்கு புள்ளி விபரங்கள் தேவையில்லை. நாட்டிற்கு வெற்று வாக்குறுதிகள் வேண்டாம். பெட்ரோல், டீசல் மீதான வரியை 2014 ஆம் ஆண்டு இருந்தபடி குறைக்க வேண்டும். ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு நிவாரணம் வழங்குங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications