5000 கார் திருட்டு, பல கொலைகள்! 3 மனைவிகளுடன் உல்லாசம்! நாட்டின் பெரிய கார் திருடன்.. மிரண்ட போலீஸ்
டெல்லி: சுமார் 5000க்கும் மேற்பட்ட கார்களை திருடிய இந்தியாவின் மிகப் பெரிய கார் திருடனை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
நம்ம ஊரில் கார், பைக்குகள் திருடப்பட்டால் அதைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பு தான். புதிதாக வரும் வாகனங்களைத் தவிரப் பிற கார்களில் ஜிபிஎஸ் வசதி எல்லாம் இல்லை.
இதனால் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் திருடப்பட்டால், அதை கிட்டதட்ட கண்டே பிடிக்க முடியாது. அவ்வளவு ஏன் புகார் கொடுத்து இன்சூரன்ஸ் கிளைம் செய்வதே கஷ்டம் தான்.

இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன்
இந்தச் சூழலில், தொடர்ந்து பல ஆண்டுகளாக கார் திருட்டியில் ஈடுபட்டு வந்த நபரைத் தலைநகர் டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அனில் சவுகான் என்ற இந்த நபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை திருடியதாகக் கூறப்படுகிறது. "இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன்" என்று அனில் சவுகானை போலீசார் குறிப்பிடுகின்றனர்.

கார் திருட்டு
52 வயதான அனில் சவுஹான் டெல்லி, மும்பை மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பல சொத்துகள் உடன் மிகவும் ஆடம்பரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இவர் கடந்த 27 ஆண்டுகளாகவே கார் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை திருடி இருக்கலாம் என போலீசார் மதிப்பிடுகின்றனர்.

ஆயுத கடத்தல்
மத்திய டெல்லி போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் தேஷ் பந்து குப்தா சாலையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அனில் தற்போது ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஆயுதங்களை எடுத்துச் சென்று வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சப்ளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மாருதி 800 கார்கள்
இவர் முதலில் டெல்லி கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால், 1995 முதல் கார்களைத் திருடத் தொடங்கி உள்ளார். அந்த காலத்தில் புகழ்பெற்று இருந்த மாருதி 800 கார்களை குறி வைத்துத் திருடியவர் என்ற பெயர் பெற்றவர் இவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார்களை திருடும் அனில் சவுகான், நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு கார்களை அனுப்பிவிடுவார். மேலும், கார் திருட்டின் சமயத்தில் சில டாக்சி ஓட்டுநர்களை அவர் கொலையும் செய்ததாகவும் போலீசார் குற்றஞ்சாட்டினார்.

180 வழக்குகள்
டெல்லியில் தொடர்ச்சியாக கார் திருட்டில் ஈடுபட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் அசாம் சென்று செட்டிலாகிவிட்டார். அங்கிருந்தபடியே டெல்லி, மும்பை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். இவர் மீது அமலாக்க இயக்குநரகமும் பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பும் அனில் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை அவர் மீது 180 வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த 2015இல் அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருடன் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது 5 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், 2020இல் தான் விடுதலை ஆனார்.

3 மனைவிகள், 7 குழந்தைகள்
அனிலுக்கு மூன்று மனைவிகள், ஏழு குழந்தைகள் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். அசாமில் இருந்த போது, உள்ளூர் அரசியல்வாதிகள் உடன் நல்ல உறவு வைத்துக் கொண்ட அவர், அரசு ஒப்பந்தங்கள் தனக்கு வருவது போல பார்த்துக் கொண்டார். அவரிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்களை போலீசார் மீட்டனர்.












Click it and Unblock the Notifications