சோனியா காந்தி - ராகுல் காந்தி மீது புதிய வழக்கு.. நேஷனல் ஹெரால்டு விசாரணையில் டெல்லி போலீஸ் அதிரடி
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். இது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு புதிய தலைவலியாக மாறி உள்ள நிலையில் இந்த வழக்கின் பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் தொடங்கிய பத்திரிகையின் பெயர் நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிகையை ‛அசோசியேடட் ஜர்னல்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தது. பிறகு கடன் பிரச்சனையால் இந்த நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மூடப்பட்டது.

இதற்கிடையே தான் கடந்த 2014ம் ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்கு சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர். இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகார் வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை உள்ளே வந்தது. இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தி, சோனியா காந்தி மறுத்தனர். ஆனால் அமலாக்கத்துறை இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தது. இருவரிடமும் பலகட்டமாக விசாரணை மேற்கொண்டது.
ஏற்கனவே ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை பணமோசடி செய்து கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்குடன் சேர்த்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் இந்தவழக்கை விசாரிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான பல நூறு கோடிக்கு மேலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. அதுமட்டுமின்றி வழக்கு தொடர்பாக ரோஸ் அவென்யூவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம்பிட்ரோடா உள்பட 6 பேர் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சாம் பிட்ரோடோ காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு தலைவராக செயல்பட்டவர். இவர்கள் தவிர வழக்கில் ஏஜேஎல், யங் இந்தியன் மற்றும் கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஷெல் நிறுவனமான டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ‛அசோசியேட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை கைப்பற்ற சோனியா காந்தியின் குடும்பத்துக்கு பணம் வழங்கியதாக கொல்கத்தாவைச் சேர்ந்த ஷெல் நிறுவனமான டோடெக்ஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications