காங்கிரஸ் கையைவிட்டுப் போகும் புதுச்சேரி.. மீண்டும் முதல்வராகும் ரங்கசாமி... ஏபிபி கருத்துக்கணிப்பு
டெல்லி: புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தமிழ்நாட்டுடன் இணைந்து ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநில தேர்தலுடன் இணைந்து வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக-காங்கிரஸ்-விசிக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இழுபறிக்குப் பின் கூட்டணி
என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைவதில் முதலில் இழுபறி நிலவியது. இருப்பினும். ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் பாஜக தயக்கம் காட்டியது. இருப்பினும், பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இன்னும் தங்கள் வேட்பாளர்களை முழுமையாக அறிவிக்கவில்லை.

வெல்லப்போவது யார்
இந்நிலையில், இந்தத் தேர்தலில் 45.4% வாக்குகளைப் பெற்று 26 முதல் 20 இடங்களில் என்ஆர் காங்கிரஸ்- பாஜக- அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் 8 இடங்களிலும் அதிமுக நான்கு இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40.7% வாக்குகளுடன் 10 முதல் -14 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது இதே கூட்டணி கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 15 இடங்களில் வென்றிருந்தது. அதைத்தொடர்ந்து சுயேச்சை எம்எல்ஏகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தது.

சிறந்த முதல்வர் வேட்பாளர்
என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சிறந்த முதல்வர் வேட்பாளராக 47.3 சதவீத மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஆட்சி மோசமாக இருந்ததாக 21 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் வேலையின்மையே முக்கிய பிரச்னை என்று 33.9 சதவீதம் பேரும் மின்சார பிரச்னை உள்ளது என்று 12.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நீர் வசதிகள் சரியாக இல்லை என்று 7 சதவீத மக்களும் சட்டம் ஒழுங்கில் சிக்கல் இருப்பதாக 9.8 பேரும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications