நேருவின் பெயரை பயன்படுத்துவதில் ஏன் தயக்கம்? காந்தி குடும்பத்தினரை அட்டாக் செய்த பிரதமர் மோடி
நேரு சிறந்த மனிதர். எனினும், அவரது குடும்பத்தினர் நேருவின் பெயரை ஏன் குடும்பப் பெயராக வைக்கவில்லை என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்
டெல்லி: நேருவின் பெயரை எங்கேயாவது நாங்கள் குறிப்பிட மறந்துவிட்டால் அவர்கள் ( காங்கிரஸ்) அப்செட் ஆகிவிடுகிறார்கள். நேரு சிறந்த மனிதர் எனில் அவரது குடும்பத்தினர் நேருவின் பெயரை ஏன் குடும்பப் பெயராக வைக்கவில்லை. நேரு பெயரை பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவமானம்? என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதிலளித்து பேசினார்.
மாநிலங்களவையில் இன்று பிற்பகல் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

பிரதமர் மோடி பேச்சு
குறிப்பாக அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளிக்கு இடையே தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசினார். பிரதமர் மோடி தனது பதிலுரையில் காங்கிரஸ் கட்சியையும் சோனியா காந்தி, ராகுல் காந்தி குறித்தும் விமர்சித்து பேசினார். பிரதமர் மோடி கூறியதாவது:-

நேரு பெயரை யாரும் பயன்படுத்துவதில்லை
நேருவின் பெயரை எங்கேயாவது நாங்கள் குறிப்பிட மறந்துவிட்டால் அவர்கள் ( காங்கிரஸ்) அப்செட் ஆகிவிடுகிறார்கள். நேரு மிகப்பெரிய மனிதர். பிறகு ஏன் அவரது பெயரை யாரும் குடும்ப பெயராக பயன்படுத்துவதில்லை. நேரு பெயரை பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவமானம்?" என்று பேசினார். தொடரந்து தனது உரையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பிரதமர் மோடி பேசினார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆரின் ஆட்சியை
அப்போது பிரதமர் மோடி கூறுகையில், "மாநில அரசுகளுக்கு நாங்கள் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், காங்கிரஸ் தனது ஆட்சி காலத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசாங்கங்களை 90 முறை கவிழ்த்துள்ளது. மாநில அரசுகளை கலைப்பதற்காக ஒரு காங்கிரஸ் பிரதமர் சட்டப்பிரிவு 356-ஐ 50 முறை பயன்படுத்தியிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை இந்திரா காந்திதான். தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்.ஜி.ஆரின் ஆட்சியை காங்கிரஸ் கலைத்துள்ளது.

ஆந்திராவில் என்.டி.ஆரின் ஆட்சியை
மகராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவாரின் ஆட்சியை கலைத்ததும் காங்கிரஸ்தான். கேரளாவில் இடது சாரிகளின் ஆட்சியை நேரு கலைத்தார். ஆந்திராவில் என்.டி.ஆரின் ஆட்சியை கலைக்க முயற்சித்தது. மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். இந்த நாடு எந்த ஒரு குடும்பத்தின் சொத்தும் கிடையது" என்றார். பிரதமர் மோடி இவ்வாறு பேசும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். எனினும் பிரதமர் மோடி தனது பேச்சை தொடர்ந்தார்.

அதானி மோடிக்கு உள்ள தொடர்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பல முறை ஒத்திவைக்கப்பட்டன. நேற்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அதானி மற்றும் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி காரசாரமாக பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications