தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.. ராமர் கோவில் அறக்கட்டளை, காஷ்மீர் 370வதுபிரிவு ரத்து!
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஞானேஷ் குமார், ஜம்மு காஷ்மீருக்கான 370வது பிரிவு ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது யூனியன்களாக பிரிக்கப்பட்டது மற்றும் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு, புதிய தலைமை தேர்தல் ஆணையர் தொடர்பாக நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் தேர்தல் ஆணைய சட்டம் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருப்பதால் புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வை ஒத்திவைக்க கோரினார் ராகுல் காந்தி. ஆனால் ராகுல் காந்தியின் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டு, ஞானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஞானேஷ்குமார். பி.டெக் படித்த ஞானேஷ்குமார் 1988-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. கேரளா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் பணி உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஞானேஷ் குமார்.
இதன்பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட ஞானேஷ் குமார், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இணை செயலாளராகப் பணியாற்றினார். உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார். நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சக செயலராகவும் ஞானேஷ்குமார் பணியாற்றினார்.
உள்துறை அமைச்சக கூடுதல் செயலராகப் பணியாற்றிய காலத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்படுவது தொடர்பான வரைவை உருவாக்குவதில் முதன்மை பங்களிப்பு செய்தவர் ஞானேஷ்குமார். ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலமான ஜம்மு காஷ்மீர்- லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது உள்ளிட்டவைகளில் ஞானேஷ்குமாரின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல உ.பி. மாநிலம் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையை உருவாக்கியதும் முக்கிய பங்களிப்பு செய்தவர் ஞானேஷ் குமார்.
ஞானேஷ்குமார், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் காலத்தில் 2025,2026-ல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2027 ஜனாதிபதி தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமாரின் பதவி காலம் 2029-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி முடிவடையும்.












Click it and Unblock the Notifications