நியூஸ் கிளிக் ரெய்டு- சீதாராம் யெச்சூரி வீட்டிலும் நுழைந்த டெல்லி போலீஸ்.. அதிர்ந்த 'இடதுசாரிகள்'!
டெல்லி: நியூஸ் கிளிக் செய்தி இணைய தளம் தொடர்பான சோதனைக்காக டெல்லி போலீசார் சிபிஎம் (மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டுக்குப் போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்று செயல்பட்டது என்பது புகார். மேலும் 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ரூ38.05 கோடி பணம் பெற்றது இந்த நிறுவனம் என்பது அமலாக்கத்துறை வழக்கு.

இந்த வழக்குகள் தொடர்பாக டெல்லி போலீசார் இன்று நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்கள் வீடுகள் உட்பட 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் 2 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த சோதனைகள் டெல்லியில் உள்ள சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் இன்று நடைபெற்றது. சிபிஎம் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் சீதாராம் யெச்சூரி வீட்டில் தங்கி நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதனால் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இது இடதுசாரி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியது. வெளிநாட்டில் இருந்து ஆதரவைப் பெற்று இந்த பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன் அமெரிக்காவை சேர்ந்த நெவில்ராய் சிங்காம், நியூஸ் க்ளிக் இணையதளத்துக்கு நிதி உதவி செய்வதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பகிரங்கமாக கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் நியூஸ் கிளிக் செய்தி இணைய தளம் மீது "ஊபா" சட்டம் பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நியூஸ் கிளிக் இணையதள சோதனைக்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை கவலைதருகிறது. இச்சோதனை குறித்த விவரங்களை விளக்கமாக தர வேண்டும் என பிரஸ் கிளப் ஆப் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இந்த சோதனைகள் தொடர்பாக சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவிக்கையில், டெல்லி போலீசார் சோதனைக்காக இன்று வந்தனர். கட்சி சக நிர்வாகி மகனிடம் விசாரணை நடத்தினர். நியூஸ் க்ளிக்கில் பணிபுரியும் அவரது செல்போன், லேப்டாப்பை போலீசார் எடுத்துச் சென்றனர். இந்த சோதனைகளுக்கு என்ன காரணம் என்பதை நாட்டு மக்கள் அறிய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications