வருதுடோய் அதிசூறாவளி புயல்.. சுழற்றி அடிக்க காத்திருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்கள்!
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் பெரும் புயலைக் கிளப்ப காத்திருக்கின்றன, தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்கள். அடுத்த லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த 5 மாநில தேர்தல்கள் மிக முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த நிலையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக படுமோசமான தோல்வியை தழுவி காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்துவிட்டது. தென்னிந்தியாவில் ஆட்சி செய்த ஒரே மாநிலம் என்ற பெருமையை பாஜக பறிகொடுத்துவிட்டது. இத்தனைக்கும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கல் படை கடுமையாக கர்நாடகா தேர்தல் களத்தில் பிரசாரம் செய்தது. ஆனாலும் கர்நாடகாவில் ஆட்சியை பாஜக பறிகொடுத்துவிட்டது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தெலுங்கானா: மொத்தம் 119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள். தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதியின் சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. 2018-ம் ஆண்டு தேர்தலில் சந்திரசேகராவ் கட்சி 88 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும் வென்றது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 7 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வென்றது. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் சந்திரசேகர ராவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற 4-வது இடத்தில் உள்ள பாஜக தீவிரம் காட்டுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியமானது என்பது தேர்தலுக்கு பின்னரே தெரியவரும்.
சத்தீஸ்கர்: கனிமவளங்கள் நிறைந்த அதேநேரத்தில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் மாநிலம் சத்தீஸ்கர். இம்மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். சத்தீஸ்கரைப் பொறுத்தவரையில் காங்கிரஸ்/ பாஜக என இரு கட்சிகளிடையேதான் போட்டி. தற்போது பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வென்று அமோக வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 15 இடங்கள்தான் கிடைத்தன. சத்தீஸ்கரில் 2008, 2013 தேர்தல்களில் பாஜகதான் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தது. 2008 தேர்தலில் 50 இடங்களையும் 2013 தேர்தலில் 49 இடங்களையும் பெற்ற பாஜக கடந்த தேர்தலில் 14 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. ஆனால் 2008-ல் 38; 2013-ல் 39 இடங்களைப் பெற்ற காங்கிரசால் கடந்த தேர்தலில் 68 இடங்களை அள்ள முடிந்தது. இத்தேர்தலிலும் இரு கட்சிகளிடையேதான் போட்டி இருக்கும்.
மத்திய பிரதேசம்: தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. பாஜக 104 இடங்களில்தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஆட்சி கமல்நாத் தலைமையில் நடைபெற்றது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியில்
அமர்ந்துள்ளது. 2008 தேர்தலில் பாஜக 143; காங்கிரஸ் 71'; 2013 தேர்தலில் பாஜக 165; காங்கிரஸ் 58 என்ற நிலைமை கடந்த தேர்தலில் அடியோடு மாறியது. இம்மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். மத்திய பிரதேசத்திலும் பாஜக/ காங்கிரஸ் என இரு கட்சிகளிடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது.
ராஜஸ்தான்: காங்கிரஸ் பல்வேறு உட்கட்சி பூசல்களுக்கிடையே ஆட்சி செய்யக் கூடிய மாநிலம் இது. முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். ராஜஸ்தானில் 2008 தேர்தலில் காங்கிரஸ் 96; பாஜக 78 இடங்களில் வென்றன. ஆனால் 2013-ம் ஆண்டில் பாஜக 163 இடத்திலும் காங்கிரஸ் வெறும் 21 இடத்திலும்தான் ஜெயித்தது. 2018-ம் ஆண்டு தேர்தலில் நிலைமை அப்படியே உருமாறிப் போனது. காங்கிரஸ் 100 இடங்களிலும் பாஜக 73 இடங்களிலும் வென்றது. இரு கட்சிகளிடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் 1%. மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள். இம்மாநிலத்திலும் காங்கிரஸ்/ பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
மிசோரம்: பாஜகவின் வாசமே அறியாத மாநிலங்களில் ஒன்றாக இருந்தது மிசோரம். 2008-ம் ஆண்டு தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் 32; எம்.என்.எஃப் 3 இடங்களில் வென்றது. 2013 தேர்தலில் காங்கிரஸ் 34 இடங்களிலும் எம்.என்.எஃப் 5 இடங்களிலும் வென்றது. ஆனால் 2018 தேர்தலில் பாஜக நுழைந்தது. அத்தேர்தலில் எம்.என்.எஃப். 27 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில்தான் வென்றது. இம்மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள்.
இந்த 5 மாநிலங்களில் மிசோரம், தெலுங்கானா தவிர ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி. ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ்- பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இம்மூன்று மாநிலங்களிலுமே 2018-ல் காங்கிரஸ் வென்ற மாநிலங்கள். மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு மூலமே அதிகாரத்தைக் கைப்பற்றியது பாஜக. ஆகையால் இந்த 3 மாநில தேர்தல் களமும் மிக மிக கடுமையானதாக இருக்கப் போகிறது. தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் சந்திரசேகர ராவ்-ன் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதேநேரத்தில் பாஜக எப்படியாவது காலூன்ற கடுமையாகப் போராடும். மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் உயிர்பெற்று எழ வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications