"டிரோன் & ராக்கெட்கள்.." டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் திடுக்! காஷ்மீர் இளைஞர் இரவோடு இரவாக கைது
டெல்லி: கடந்த வாரம் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் உதவியதாகச் சொல்லி காஷ்மீரை சேர்ந்த ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். டிரோன்கள் மற்றும் ராக்கெட்களை தயாரித்துக் கொடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
கடந்த வாரம் டெல்லியில் மிக மோசமான ஒரு குண்டுவெடிப்பு தாக்குதல் அரங்கேறியது. நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் இருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் அருகே இருந்த சில வாகனங்களிலும் தீப்பற்றியது. டெல்லியில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மோசமான தீவிரவாதத் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

டெல்லி குண்டுவெடிப்பு
இந்தச் சம்பவத்தில் 13க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தீவிரவாத செயல் என்பது தெரிய வந்தது.. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ முகமைக்கு மாற்றப்பட்டு, அந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் மற்றும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கப் பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரண்டாவது நபர் கைது
இதற்கிடையே தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி உமர் அன் நபிக்கு உதவியதாகச் சொல்லி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் ஜசீர் பிலால் வானி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வைத்து ஜசீர் பிலாலை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
அங்குள்ள அனந்த்நாக் மாவட்டம் காசிகுண்டைச் சேர்ந்த ஜசீர், ட்ரோன்களை தாக்குதல் நடத்துவதற்கு ஏற்றபடி மாற்றி கொடுத்துள்ளார். மேலும், தீவிரவாத கும்பலுக்கு ராக்கெட் தயாரிக்கும் முயற்சியிலும் ஜசீர் ஈடுபட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தக் கைதை என்ஐஏ அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
டிரோன் & ராக்கெட்
அதில்'டேனிஷ்' என்ற பெயரில் அறியப்படும் ஜசீரனை என்ஐஏ குழு ஸ்ரீநகரில் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், "ஜம்மு- காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் காசிகுண்டைச் சேர்ந்த இந்த நபர், டெல்லி தாக்குதலின் முக்கியக் கூட்டாளி ஆவார். தீவிரவாதி உமர் அன் நபியுடன் இணைந்து இந்தக் கொடூரத் தாக்குதலைத் திட்டமிட்டவர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காணப் பல்வேறு இடங்களிலும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கைது
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்தபோது, அதை உமர் அன் நபி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவரை என்ஐஏ அதிகாரிகள் "தற்கொலைப் படைத் தீவிரவாதி" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் "வாகனத்தில் வைக்கப்படும் சாதனம்" (Vehicle-borne IED) பயன்படுத்தப்பட்டதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக அமீர் ரஷீத் அலியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்தனர். குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் இவர் பெயரில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அமீர் ரஷீத் அலி ஜம்மு காஷ்மீரின் பம்போர் மாவட்டத்தில் உள்ள சம்போரா பகுதியைச் சேர்ந்தவர். நபியுடன் இணைந்து இவரும் இந்தச் சதி திட்டத்தைத் தீட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications