தமிழகத்தின் நிலைமை! நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியல்! டாப் 100இல் தமிழக நகரம் ஒன்று கூட இல்லை
டெல்லி: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டுக்கான பட்டியலில் தமிழகத்தில் இருந்து ஒரு நகரம் கூட டாப் 100 இடத்தில் வரவில்லை. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் நமது நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிடும்.

நாடு முழுக்க உள்ள 446 நகரங்களை பல்வேறு தரநிலைகளில் ஆய்வு செய்து இந்த ஸ்வச் சர்வேக்ஷன் 2023 முடிவுகளை மத்திய அரசு வெளியிடும். அதன்படி இந்தாண்டிற்கான ஸ்வச் சர்வேக்ஷன் பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது.
முதலிடம் யாருக்கு: இந்தாண்டு நாட்டிலேயே தூய்மையான நகரமாக இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை தேர்வாகியுள்ளது. இரு நகரங்களுமே முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நவி மும்பை இதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தூர் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 'ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2023'இல் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பிரிவில், மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு: இதில் கவனிக்க வேண்டிய மோசமான விஷயம் என்னவென்றால் 466 நகரங்களை கொண்ட இந்த லிஸ்டில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நகரமும் வரவில்லை. அதிகபட்சமாக திருச்சி இந்த பட்டியலில் 112ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையை கொண்ட நகரங்கள் பிரிவில் திருச்சி 112இல் உள்ளது. கடந்தாண்டு திருச்சி 262ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த டெஸ்டில் திருச்சி 9,500 மதிப்பெண்களுக்கு 5,794.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தூய்மையான நகராக திருச்சி தேர்வாகியுள்ளது. இந்த லிஸ்டில் தூத்துக்குடி மற்றும் கோவை ஆகிய நகரங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179ஆவது இடத்தையும், கோவை 182ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
தலைநகர் சென்னை: அதேபோல நமது மாநிலத்தின் தலைநகர் சென்னை இந்த லிஸ்டில் 199ஆவது இடத்தைப் பெற்றுள்ளது, மாநில அளவில் இது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஐந்து நகரங்களில் ஒன்று கூட நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் வராதது பலருக்கும் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசும் சரி மக்களும் சரி நகரங்களை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்று பலரும் சாடியுள்ளனர்.
இது குறித்து நெட்டிசன் ஒருவர், "ஸ்வச் சர்வேக்ஷன் 2023 நாட்டின் முதல் 100 தூய்மையான நகரங்களில் தமிழ்நாட்டின் எந்த நகரமும் இடம் பெறவில்லை. திருச்சி அதிகபட்சமாக 112ஆவது இடத்தில் உள்ளது.. அதேபோல சென்னை 199வது இடத்தில் உள்ளது. கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைக்கு நாம் எந்தவொரு முக்கியத்துவத்தையும் தருவதில்லை என்பதையே இது காட்டுகிறது. நிலைமை இப்படியிருக்கு நாம் நம்மை வளர்ந்த மாநிலம் என்று அழைப்பதில் அர்த்தமே இல்லை" என்று பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications