நகர்ப்புற நக்சல்கள், ஜாதி அரசியல்! ஓபிசி மக்கள் மீதும் அக்கறை இல்லை! லோக்சபாவில் பிரதமர் மோடி தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசினார். காங்கிரஸை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி, காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பெண்கள் முன்னேற்றத்தைப் பொறுக்க முடியாமல் பெண் ஜனாதிபதியைச் சிலர் விமர்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்குப் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். பிரதமர் மோடி தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

budget 2025 parliament narendra modi 2025

பிரதமர் மோடி பேச்சு:

பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "நம் நாட்டில் ஒரு பிரதமர் இருந்தார். அவர் நமது நாட்டில் இருந்த ஒரு பிரச்சனையை அடையாளம் கண்டார். அதாவது டெல்லியில் இருந்து மக்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பப்படும்போது, ​​​​15 பைசா மட்டுமே மக்களுக்குச் செல்வதாகக் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் மத்திய அரசு முதல் பஞ்சாயத்து வரை ஒரே கட்சிதான் ஆட்சியில் இருந்தது. எனவே, அப்போது 15 பைசா மட்டுமே மக்களுக்குப் போக யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, எல்இடி பல்புகள் ரூ.400க்கு விற்கப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அது தொடர்பாக சர்வே நடத்தி, உண்மையான விலையான ரூ.40க்கு குறைத்தோம். எல்இடி பல்புகள் எரிசக்தியைப் பாதுகாக்க உதவியது. இதன் மூலம் நாட்டு மக்களின் ரூ.20,000 கோடி சேமிக்கப்பட்டது.

சேமிப்பு மேம்பட்டுள்ளது:

கடந்த 10 ஆண்டுகளில், நடுத்தர வர்க்கத்தினர் செலுத்த வேண்டிய வருமான வரியைக் குறைத்து மக்களின் சேமிப்பை மேம்படுத்தியுள்ளோம். 2014க்கு முன், வரி என்ற பெயரில் வெடிகுண்டுகள் மற்றும் புல்லட்கள் செலுத்தப்பட்டன. அவை, மக்களின் வாழ்க்கையைப் பாதித்தது. இப்போது நாங்கள் மிடில் கிளாஸ் மக்களைப் பாதுகாத்து வருகிறோம்.

2013-2014ம் ஆண்டில் வருமான வரி விலக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது. இப்போது அதை ரூ.12 லட்சமாக உயர்த்தியுள்ளோம். இப்போது நாங்கள் மிடில் கிளாஸ் மக்களின் காயங்களைச் சரி செய்து, பேண்டேஜ் போட்டுள்ளோம். நிலையான கழிவையும் சேர்த்தால் மாத சம்பளதாரர்கள் ரூ.12.75 லட்சம் வரை வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

லாப நஷ்டம் கருதாமல்:

நலத்திட்டங்களில் முறைகேடாக பலம் பெற்றோரைக் கண்டறிந்து, அரசியல் லாப நஷ்டம் கருதாமல் 10 கோடி போலிப் பயனாளிகளை நீக்கியுள்ளோம். ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் குப்பைகளை விற்று அரசுக்கு ரூ.2,300 கோடி கிடைத்தது. அந்தப் பணத்தை மக்களுக்காகப் பயன்படுத்தியுள்ளோம். தேசத்தைக் கட்டியெழுப்ப மக்கள் ஒன்றிணைந்து செயற்படும்போது நிச்சயம் நடக்கும். நாட்டின் இளைஞர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். திறமையான இளைஞர்களைக் கண்டறிய ஒரு சிறந்த சூழலை உருவாக்கியுள்ளோம்.

இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஆனால், இங்கே இளைஞர்களை ஏமாற்றும் ஒரு சில கட்சிகள் உள்ளன. தேர்தல் நேரத்தில் மட்டும் ஒரு சில கட்சிகள் உதவித்தொகை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால் அந்த வாக்குறுதிகளை அவர்கள் ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை. ஹரியானாவில் நாங்கள் எப்படி ஆட்சி செய்கிறோம் என்பதை நாடு பார்க்கிறது. இதன் காரணமாகவே ஹரியானாவில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளோம்.. மகாராஷ்டிராவில் சரித்திர வெற்றியைப் பதிவு செய்துள்ளோம்.

நகர்ப்புற நக்சல்கள்:

இன்று சிலர் நகர்ப்புற நக்சல்களை போல வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர். அவர்கள் இதுபோல இந்திய அரசுக்குச் சவால் விடுவதும், அதற்கு எதிராகப் போராடுவதும் துரதிர்ஷ்டவசமானது. இந்த மொழியைப் பேசுபவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டமோ, தேசத்தின் ஒற்றுமையோ புரியவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப்பட்டன. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமல்ல, இந்தப் பகுதி மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும். அதனால்தான் நாங்கள் தேவையான துணிச்சலான முடிவுகளை எடுக்கிறோம்.

சிலருக்கு ஜாதி பற்றிப் பேசுவது ஃபேஷனாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக ஓபிசி கமிஷனுக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி இருக்கிறது. இன்று சாதி வைத்து அரசியல் செய்வோர் கடந்த காலங்களில் ஓபிசி சமூகத்தை நினைக்கவில்லை. நாங்கள் தான் ஓபிசி கமிஷனுக்கும் அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கினோம்.

பெண் ஜனாதிபதி:

இப்போது ஒரு பெண் ஜனாதிபதியை அவமானப்படுத்துகிறார்கள். அவர்களின் அரசியல் விரக்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஜனாதிபதி அவமதிக்கப்படுவதற்கான காரணம் என்ன? இன்று இந்தியா பெண்கள் தலைமையில் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. பெண்களுக்கு முழு வாய்ப்பு கிடைத்தால், தற்போது நாம் அடையும் வளர்ச்சியை விட இந்தியா இரண்டு மடங்கு வேகத்தில் முன்னேற முடியும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+