அதிமுக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ் + டிடிவி தினகரன்? எடப்பாடி பழனிச்சாமியுடன் - அமித்ஷா ஆலோசனை
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த சந்திப்பின்போது ஓ பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்ப்பது பற்றி இருவரும் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக - பாஜக கூட்டணியில் ஐக்கியமாகிறார்களா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை வலுப்படுத்த இருகட்சிகளும் முயன்று வருகின்றன. அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கூட்டணியில் இணைந்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அதன்பிறகு சற்று நேரத்துக்கு முன்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இருவரும் தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சந்திப்பின்போது அதிமுக - பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிய ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வருவது பற்றி இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் பாஜக கூடுதல் இடங்களை பெற்று அதில் உள் ஒதுக்கீடாக ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
