பெட்ரோல், டீசல், LPS கேஸ் விலையை உயர்த்த வேண்டும்.. அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நெருக்கடி!
டெல்லி: இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன. விரைவில் மத்திய அரசு விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. இதையடுத்து, ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்துக்கு மேல் போர் நீடித்தது.

இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் சரக்குக் கப்பல் போக்குவரத்து முடங்கியது. இதனால், உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் விலை இதுவரை உயர்த்தப்படவில்லை. வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு வருகிறது.
மே 1 ஆம் தேதி வணிக கேஸ் சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை 40 - 50 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது. எனினும், ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமையன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 126 டாலருக்கு மேல் உயர்ந்தது, பின்னர் சற்று குறைந்தது. இது ஹார்முஸ் ஜலசந்தியில் நீடித்த இடையூறு குறித்த கவலைகளை அதிகரித்தது.
இந்த விலை உயர்வு, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் இழப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது, குறிப்பாக, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றின் விற்பனையில் அதிக நஷ்டம் ஏற்பட்டு வருவதால் அவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.
ஆனாலும் மத்திய அரசு உடனடியாக விலையை உயர்த்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில், எரிபொருள் விலையை உயர்த்தினால் பணவீக்கம் கணிசமாக அதிகரிக்கும் என மத்திய அரசு கருதுகிறது. எனினும், விரைவில் விலை உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின் எரிபொருட்களின் விலை முதல் முறையாக உயரும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டால், போக்குவரத்துக்கான செலவுகள் அதிகரிக்கும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications