ஆபரேஷன் சிந்தூர்.. பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது எப்போது? ஓபனாக சொன்ன முப்படை தலைமை தளபதி
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது குற்றம் என்று காங்கிரஸ் கடுமையாக சாடி வரும் நிலையில், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய 5 நிமிடங்கள் கழித்தே பாகிஸ்தானிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா எடுத்தது.

ஜெனரல் சவுகான் விளக்கம்
இந்தியா மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான், இந்தியாவின் குடியிருப்பு பகுதியில் தாக்க முற்பட்டது. இதனை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. இந்தியாவின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாத பாகிஸ்தான், பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.
இதையடுத்து சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது வெளியாகி வருகிறது. அந்தவகையில், இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு 5 நிமிடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கேள்விகள்
சவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் 'எதிர்காலப் போர்கள் மற்றும் போர்முறை' குறித்த சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஜெனரல் சவுகான் கூறியதாவது:- மே 7 அன்று தாக்குதல் நடத்தியதும், பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 1 மணி முதல் 1.30 மணிக்குள் தாக்குதல் நடத்திய பின், ஐந்து நிமிடங்களில் பாகிஸ்தானுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஜெனரல் சவுகானின் இந்த கருத்து, காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதாக அமைந்தது. ஆபரேஷன் சிந்துர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் அளித்ததன் மூலம், அரசு "குற்றம்" இழைத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.
யார் அதிகாரம் கொடுத்தது
தொடர்ந்து அனில் சவுகான் மேலும் கூறியதாவது:- இந்திய ஆயுதப் படைகள் எல்லை தாண்டிய தாக்குதல்களில் " மிகவும் கவனமாக " செயல்பட்டன. பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் மற்றும் இராணுவ தளங்களை தவிர்த்து தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னதாக கடந்த மாதம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இது ஒரு "குற்றம்" என்றும், இதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எத்தனை விமானங்களை இழந்தது?
அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், "தாக்குதல் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது ஒரு குற்றம். இதை வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், "இதற்கு யார் அதிகாரம் அளித்தது? இதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், ஆபரேஷன் சிந்துரை விமானப் போரில் ஒரு வரலாற்றுச் சாதனை என்று சவுகான் கூறினார். துல்லியமான, இடைவிடாத நடவடிக்கைகளை எதிரி நாட்டுக்குள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.விமானப் போரைப் பொறுத்தவரை ஆபரேஷன் சிந்துர் ஒரு வரலாற்றை உருவாக்கியது. துல்லியத்துடனும், ஆக்கிரமிப்பு நோக்கத்துடனும் இடைவிடாத தாக்குதல்களை மேற்கொண்டோம். எதிரி நாட்டுக்குள் ஊடுருவ முடிந்தது ஒரு பெரிய சாதனை," என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications