"பாஜகவுக்கு எதிராக கருத்துகள்!" லோக்சபா தேர்தலை சீர்குலைக்க சதி! போட்டு உடைத்த ஓபன் AI- என்ன நடந்தது
டெல்லி: லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பித் தேர்தலைச் சீர்குலைக்க முயற்சி நடந்ததாகவும் இருப்பினும் 24 மணி நேரத்திற்குள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே ஆறு கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், கடைசிக் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தல்: இதற்கிடையே இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பித் தேர்தலைச் சீர்குலைக்க முயற்சிகள் நடந்துள்ளதாகப் பிரபல ஏஐ டூல் ஆன சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக "Zero Zeno" என்ற ஆப்ரேனஷனை நடத்தியுள்ளது. இதை இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல அரசியல் மேலாண்மை நிறுவனமான STOIC நடத்தியுள்ளது.
சாட் ஜிபிடி வலிமையான ஏஐ டூலாக இருக்கும் நிலையில், அதை வைத்து ஆளும் பாஜகவை விமர்சிக்கும் வகையிலும் காங்கிரஸைப் பாராட்டியும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட ஏஐ டூல்கள் மூலம் முயற்சி நடந்ததாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது
சதி: இது குறித்து அந்த நிறுவனம் கூறுகையில், "மே மாதத்தில், எங்கள் நெட்வொர்க்கில் இந்தியாவை மையமாகக் கொண்ட கருத்துக்களை உருவாக்கத் தொடங்கியது.. குறிப்பாக ஆளும் பாஜகவை விமர்சித்தது மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைப் பாராட்டியும் கருத்துகள் பதிவாகத் தொடங்கின. இந்தியத் தேர்தல்கள் குறிவைத்து இந்த செயல் நடக்கத் தொடங்கிய 24 மணி நேரத்தில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்தோம்.
எக்ஸ் (ட்விட்டர்), ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் கருத்துகளைப் பதிவிட இஸ்ரேலில் இருந்து இயக்கப்பட்ட பல கணக்குகளை நாங்கள் பிளாக் செய்தோம். முதலில் இவர்கள் கனடா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் மக்களைக் குறிவைத்து இந்த ஆப்ரேஷனை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் ஹீப்ருவில் கண்டெண்டுகளை உருவாக்கியுள்ளனர். மே முதல் வாரத்தில் ஆங்கில கண்டெண்டுகளுடன் இந்திய மக்களைக் குறிவைத்துள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக: இந்த ரிப்போர்ட் நாடு முழுக்க பேசுபொருள் ஆகியுள்ளது. நாட்டில் லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே இது ஜனநாயகத்திற்கு "ஆபத்தான அச்சுறுத்தல்" என்று பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐடி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "பாஜகவைக் குறிவைத்தே இந்த தகவல்களைப் பரப்பி உள்ளனர் என்பது முற்றிலும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிகிறது. இவர்கள் இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகள் சார்பாகவே இதை மேற்கொண்டு இருப்பார்கள் என சந்தேகிக்கிறோம்.
இது நமது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவிலும் வெளியிலும் உள்ள சில அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.. இந்த ரிப்போர்ட்டை ஓபன் ஏஐ முன்கூட்டியே வெளியிட்டு இருக்க வேண்டும். தேர்தல் முடியும் நேரத்தில் வெளியிட்டு இருக்கக்கூடாது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மற்ற முயற்சிகள்: இது தவிர வேறு சில உலகின் மற்ற பகுதிகளைக் குறிவைத்துக் கடந்த 3 மாதங்களில் 5 முறை முயற்சிகள் நடந்ததாகவும் அவை அனைத்தும் உடனடியாக முறியடிக்கப்பட்டதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications