போருக்கு நடுவே மாஸ் காட்டும் மத்திய அரசு! இஸ்ரேலில் இருந்து 2வது விமானத்தில் இந்தியா வந்த 235 பேர்
டெல்லி: ‛ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 2வது கட்டமாக 235 இந்தியர்கள் விமானத்தில் டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தால் ஏற்கனவே 212 பேர் வந்த நிலையில் இப்போது 235 பேர் நாடு திரும்பி உள்ளனர். அவர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டி உள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்தில் 7 ஆயிரம் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தினர்.

மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்து பதிலடி தாக்குதல் நடத்தியது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாக கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இதனால் காசா பகுதியில் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமானதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்பு கருதி மக்கள் ஐநா பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது வரை இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 2,400-ஐ தாண்டியுள்ளது. மேலும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று 8 வது நாளாக போர் என்பது நடந்து வருகிறது. தற்போது காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படையினர் இன்று முதல் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே பெரிய அளவில் துப்பாக்கிச்சண்டை நடக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் இந்தியா இறங்கி உள்ளது. இஸ்ரேலை பொறுத்தமட்டில் 18 ஆயிரம் இந்தியர்கள் அங்கு இருக்கின்றனர். இவர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு விமானம் முதற்கட்டமாக 212 பேரை இஸ்ரேலின் டெல்அலிவ் நகரில் இருந்து பத்திரமாக மீட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 2வது விமானம் இஸ்லேின் டெல் அலிவ் நகரில் இருந்து புறப்பட்டது. இதில் 235 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இவர்கள் இன்று காலையில் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக இறங்கினர். அவர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டினர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனைவரும் பத்திரமாக அழைத்து வரப்பட்டு வருகின்றனர். மேலும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் தூதரகங்களை தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு பத்திரமாக திரும்பலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications