"பாகிஸ்தானுக்கு பேரழிவு! அரபிக்கடலில் தயார் நிலையில் நின்ற போர் கப்பல்கள்" கடற்படை ஜெனரல் எச்சரிக்கை
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ராணுவ நடவடிக்கைகளின் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது பாகிஸ்தானை நோக்கி அரபிக் கடலில் இந்தியக் கடற்படை தயாராக இருந்ததாகக் குறிப்பிட்ட ஜெனரல் ராஜீவ் காய், பாகிஸ்தான் பின்வாங்கவில்லை என்றால் அவர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பல்வேறு தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர். காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை ராணுவ நடவடிக்கைகளின் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார். அதாவது அரபிக்கடலில் இந்தியக் கடற்படை தயாராக இருந்ததாகத் தெரிவித்த அவர், நான்கு நாட்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு பாகிஸ்தானே போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.
பேரழிவு
ஐக்கிய நாடுகள் சபையின் படை பங்களிப்பு நாடுகளின் (UNTCC) தலைவர்கள் மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில், "இந்திய கடற்படையும் ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்டு இருந்தது. இந்த உண்மை பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். கடற்படை அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்தது. பாகிஸ்தான் பின்வாங்காமல் இருந்திருந்தால், மிகக் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
அவர்கள் மோதலை மேலும் இதைத் தொடர முடிவு செய்திருந்தால், அது அவர்களுக்குப் பேரழிவை ஏற்பட்டு இருக்கும். கடலில் இருந்து மட்டுமல்லாமல், எல்லாப் பக்கத்தில் இருந்தும் தாக்குதல்கள் நடந்திருக்கும்.
இலக்குகள்
ஏப்ரல் 22 முதல் மே 6-7 வரை பல்வேறு நடவடிக்கைகள் குறித்துத் திட்டமிட்டோம்.. இந்தக் காலகட்டத்தில் நாங்கள் எங்கள் இலக்குகளைக் கண்டறிந்தோம். எதிரிகள் நமது நாட்டில் ஊடுருவுவதைத் தடுக்க நமது எல்லைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இந்த நடவடிக்கையின்போது பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன.
பாதுகாப்புப் படையின் மூலம் தாக்குதலுக்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே, இன்னொரு பக்கம் மிக சிறப்பான தகவல் போரும் நடந்து வந்தது. பொய்யான தகவல்களை நாம் முறியடித்தோம். இப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டில் மிக பெரிய மாற்றம் நடந்துள்ளது என்றே நினைக்கிறேன்.
மூன்று முக்கிய எச்சரிக்கை
நமது பிரதமர் இதைப் பற்றிப் பேசியுள்ளார். அவர் மூன்று விஷயங்களைக் கூறினார்: இனி பயங்கரவாத தாக்குதல்கள் என்பது போரின் ஒரு செயல்; இதற்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும்.. அடுத்து அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்.. கடைசியாகப் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்று மூன்று முக்கிய எச்சரிக்கைகளை நாம் அனுப்பியுள்ளோம்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இந்திய ராணுவம் எங்குச் சென்றாலும் துரத்திச் சென்று அழிப்போம் என்பதில் உறுதியாக இருந்தோம். அதை நாங்கள் செய்தும் காட்டினோம். அதற்கு 96 நாட்கள் ஆனது. ஆனால் அதுவரை நாங்கள் அவர்களைச் சும்மா விடவில்லை. தேடிக் கொண்டே இருந்தோம். இதனால் அவர்கள் ஓடி ஓடி சோர்வடைந்து இருந்தனர். இதன் மூலம் நீதி வழங்கப்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications