கனிமொழியை பாராட்டிய மோடி.. ரொம்ப பெருமையாக இருக்கு.. வெளிநாடு சென்று வந்த எம்பிக்களை சந்தித்த பிரதமர்
டெல்லி: பாகிஸ்தானின் பயங்கரவாத செயலுக்கு பதிலடி கொடுக்கும் ' ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கை தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா உள்பட 33 நாடுகளுக்கு சென்று வந்த கனிமொழி, சசிதரூர் உள்பட எம்பிக்கள் குழுவை அழைத்து பிரதமர் மோடி இன்று பாராட்டியதோடு அவர்களுக்கு விருந்து அளித்தார்.
காஷ்ரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது. கடந்த மாதம் 7 ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதேபோல் கடந்த மாதம் 10ம் தேதி நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய விமான தளம் உள்பட 12 இடங்கள் அழிக்கப்பட்டன.

இதையடுத்து பாகி்ஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. சண்டையை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து நம் நாடு தாக்குதலை நிறுத்தியது. இருப்பினும் பாகிஸ்தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி தவறான தகவல்களை பரப்பியது. இதனை கண்டித்தும், நடந்த உண்மையை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கவும் எம்பிக்கள், தூதர்கள் அடங்கிய 7 குழுவை 33 நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பியது.
இதில் ஒரு குழுவை திமுக எம்பி கனிமொழி எம்பி, இன்னொரு குழுவை காங்கிரஸ் எம்பி சசிதரூர் வழிநடத்தினர். பிற 5 குழுக்களை மற்ற எம்பிக்கள் வழிநடத்தினர்.அதன்படி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா தலைமையிலான குழுவினர் இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கும், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவினர் ஸ்பெயின் கிரீஷ், ஸ்லோவேனியா, லத்திவா, ரஷ்யாவிற்கும் சென்றனர்.
மேலும் சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன்) தலைமையிலான குழுவினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபேரியா, காங்கோ, சியாரா, லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றனர்.
பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டாவின் குழுவினர் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜிரியாவுக்கும், பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐநா, இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கும், காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் எம்பி தலைமையிலான குழுவினர் அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) எம்பி சுப்ரியா சூலே தலைமையிலான குழுவினர் எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்ஆப்பிரிக்காஉள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்தனர்.
இவர்கள் அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாதம், ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் மேற்கொண்டது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்தனர். இந்த 7 எம்பிக்கள் தலைமையிலான குழுவினர் வெளிநாடு பயணத்தை முடித்து நாடு திரும்பிய நிலையில் இன்று பிரதமர் மோடி தனது இல்லத்தில் சந்தித்து அனைவரையும் பாராட்டினார். விருந்தும் வழங்கினார். அனைவருடனும் சேர்ந்து பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த சந்திப்பின்போது எம்பிக்கள் தங்களின் வெளிநாடு பயண அனுபவத்தை பிரதமர் மோடியிடம் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி, எம்பிக்களுடன் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டார். இதனை மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், ‛‛பல்வேறுநாடுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகளை சந்தித்தேன். அமைதியை நோக்கிய இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்து கூறினார்கள். இந்தியாவின் குரலை வெளிநாடுகளில் முன்வைத்ததை நினைத்து அனைவரும் பெருமைப்படுகிறோம்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications