தேர்தல் ஆணையம் நோக்கி போன எம்பிக்களை கைது செய்த டெல்லி போலீஸ்: கோபத்துடன் ராகுல் காந்தி சொன்ன விஷயம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பதால் ராகுல் காந்தி உள்ளிட்ட சில எம்பிக்களை போலீசார் கைது செய்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, இது அரசியல் போராட்டம் அல்ல.. ஜனநாயகத்தை காக்கவே இந்த போராட்டம். ஒருவருக்கு ஒரு ஓட்டு வேண்டும் எனவும் புதிய வாக்காளர் வரைவு வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகவும் கூறி தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்றனர்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி
ராகுல் காந்தி தலைமையிலான இந்த பேரணியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் பங்கேற்றனர். மொத்தம் 25 கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, திமுக எம்பி டி ஆர் பாலு, கனிமொழி மற்றும் சரத் பவார், சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சரியாக 11.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியை தொடங்கினர்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்றும், வாக்கு திருட்டு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக தேர்தல் ஆணையம் நோக்கி புறப்பட்டனர். போலீசாரும் பாதுகாப்புக்கு சென்றனர். அப்போது அவர்கள் பலரும் தேர்தல் ஆணைய அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனினும் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆரவாரம் செய்ததால், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்புகள் வைத்தனர்.
சாலையில் அமர்ந்து போராட்டம்
மேலும் 30 எம்பிக்கள் மட்டும் உள்ளே சென்று மனுவை அளிக்க போலீசார் அனுமதி கொடுத்தனர். எனினும் சில எம்பிக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30 எம்பிக்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசாரின் தடுப்புகளை தாண்டி எம்பிக்கள் வர முயன்றனர். அகிலேஷ் யாதவ் எம்பி தடுப்புகள் மீது ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்.
இதனையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்தனர். போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கப்படவில்லை. இதன் பின்னர் போலீசார் எம்பிக்களை இரண்டு பஸ்களை வர வைத்து அதில் ஏற்றிச்சென்றனர். போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பதால் ராகுல் காந்தி உள்ளிட்ட சில எம்பிக்களை போலீசார் கைது செய்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இது அரசியல் போராட்டம் இல்லை.. ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம் என்று கூறினார்.
அரசியல் போராட்டம் அல்ல
அப்போது ராகுல் காந்தி கூறுகையில், "புதிய வாக்காளர் வரைவு வேண்டும். அரசமைப்பை பாதுகாக்கவே போராட்டம் நடத்தினோம், உண்மை நாட்டின் முன் உள்ளது. ஒரு குடிமகனுக்கு ஒரு ஓட்டு வேண்டும். இது அரசியல் போராட்டம் கிடையாது, ஜனநாயகத்தை காப்பதற்காகவே போராட்டம் நடத்தினோம்" என்று கூறினார். இந்த போராட்டம் காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications
