14 பேர் சஸ்பெண்ட்-லோக்சபா, ராஜ்யசபா முடக்கம்-நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
டெல்லி: நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் இன்று எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டன. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார்.
நாடாளுமன்றத்துக்குள் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது. நாடாளுமன்ற வளாகத்துக்கும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் புகை பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ள இத்தாக்குதல் குறித்து பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் தரக் கோரி லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபாவில் மொத்தம் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லோக்சபாவில் திமுகவின் கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்களும் பங்கேற்றனர். அப்போது கைகளில் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.
லோக்சபா, ராஜ்யசபா முடக்கம்: இதனிடையே இன்று காலை லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகளும் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் பகல் 2 மணிக்கு இரு சபைகளும் கூடின. அப்போதும் இரு சபைகளிலும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications
