நாட்டைவிட அரசியல் நலனே முக்கியம்.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!
டெல்லி: நாட்டின் நலன்களை விடவும் அரசியல் நலன்களுக்கு எதிர்க்கட்சிகள் முக்கியத்துவம் கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் ஒரு வாரமாக லோக் சபா மற்றும் ராஜ்ய சபா முடங்கியது.
இந்த நிலையில் இன்று மீண்டும் லோக் சபா கூட்டம் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் சமாஜ்வாதி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ஹர்மோகன் சிங் யாதவின் 10வது நினைவு ஆண்டு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்தியாவில் எமர்ஜென்சியின் அமல்படுத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் நசுக்கப்பட்டபோது, அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்றிணைந்து அரசியல் சாசனத்தை காப்பாற்ற போராடின. அந்தப் போராட்டத்தின் முக்கியப் போராளிகளில் ஹர்மோகன் சிங் யாதவும் ஒருவர்.
ஆனால் அண்மைக் காலமாக அரசியல் கட்சியினர் நாட்டின் நலனை விடவும், அரசியல் மற்றும் கருத்தியல் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எப்போதும் ஒரு கட்சியையோ அல்லது தனி நபரையோ எதிர்க்கும் போது, அது நாட்டிற்கு எதிராக மாறக்கூடாது. இது ஒவ்வொரு அரசியல் கட்சியின் பொறுப்பாகும். அரசியல் கட்சிகளின் கொள்கைகளுக்கு, சித்தாந்தங்களுக்கும் எப்போதும் தனி இடம் உண்டு. ஆனால் எப்போதும் நாடே முதன்மையானது.
ஒவ்வொரு முறையும் அரசு முடிவெடுக்கும் போது எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்த போது எடுத்த முடிவுகளை அவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்போது அதே முடிவுகளை நடைமுறைப்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications