நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷன் விருது.. கெளரவித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
டெல்லி: பரத நாட்டியக் கலைஞரும், நடிகையுமான ஷோபனாவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவித்தார்.
இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் பத்ம பூஷன் விருதும் ஒன்றாகும். கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இந்த பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்த் திரையுலகில் உள்ள கலைஞர்களின் கலைத் திறனைப் பாராட்டியும் இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2025ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி அறிவித்தது. 7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. நடிகர் அஜித்குமார், நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல்கட்டமாக நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தார்.
இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரகுமார் மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

அதேபோல, அலங்காநல்லூரைச் சேர்ந்த பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் கெளரவித்தார்.












Click it and Unblock the Notifications