பதுங்கு குழிகள் ரெடி.. கோதுமையை சீக்கிரமே அறுவடை செய்யும் மக்கள்! எல்லையோர மாவட்ட லைவ் ரிப்போர்ட்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதட்டமான சூழல், ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே வசிக்கும் கிராம மக்களை மீண்டும் ஒருமுறை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்தவொரு அவசரகால (போர்) சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பதுங்கு குழிகளைச் சீரமைப்பது மற்றும் கோதுமை அறுவடையை முன்கூட்டியே மேற்கொள்வது போன்ற பணிகளில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்ச உணர்வு நிலவினாலும், தங்கள் வாழ்வாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், அசாத்திய துணிச்சலுடன் களத்தில் நிற்கின்றனர் எல்லையோர கிராம மக்கள்.

பதுங்கு குழிகளை சீரமைக்கும் பணி தொடக்கம்
ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள ட்ரேவா கிராமத்தின் முன்னாள் சர்பஞ்ச் பல்பிர் கவுர் கூறுகையில், "அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எல்லையில் இருந்து ஷெல் தாக்குதல் அல்லது துப்பாக்கிச் சூடு நடந்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நிலத்தடி பதுங்கு குழிகளைத் தயார் செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றார் கண்ணீருடன்.
எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்புப் படையினருடன் தோளோடு தோள் நிற்பதாகவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தனிநபர் மற்றும் கூட்டுப் பதுங்கு குழிகளை மத்திய அரசு ஏற்கனவே கட்டியுள்ளது. தற்போது, இந்த பதுங்கு குழிகளைச் சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முன்கூட்டியே நடக்கும் அறுவடை
எல்லையோர மாவட்டங்களின் வயல்களில் இருந்து அறுவடை இயந்திரங்களின் சத்தம் கேட்கிறது. வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே கோதுமை அறுவடை நடைபெறுகிறது. ஒரு கிராமவாசி சேவா ராம் கூறுகையில், "பெண்கள் பதுங்கு குழிகளைச் சுத்தம் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள், ஆண்கள் வயலில் நிற்கும் கோதுமைப் பயிரை சில நாட்களுக்கு முன்பே அறுவடை செய்ய முடிவு செய்துள்ளனர். பாதுகாப்பற்ற இந்த சூழலில், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாததால், எங்கள் வாழ்வாதாரமான பயிர்களைப் பாதுகாக்க இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் ஆயுதங்கள் இல்லாத வீரர்கள், எதிரியை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.
#WATCH | Poonch, Jammu and Kashmir | People of Karmarha village near the Line of Control clean the bunkers that were built by the government for the safety of the people pic.twitter.com/pPsmxqE416
— ANI (@ANI) April 26, 2025
நிலவும் பதற்றம் மற்றும் மக்களின் மனநிலை
இந்தியா, பாகிஸ்தானுடன் 3,323 கி.மீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில் 221 கி.மீ சர்வதேச எல்லையாகவும், 744 கி.மீ ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடாகவும் உள்ளது. 2021 முதல் சண்டை நிறுத்த மீறல்கள் குறைந்திருந்தாலும், சமீபத்தில் பஹல்காமில் நடந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஒருவித அச்ச உணர்வு எல்லையோர கிராமங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் சர்வதேச எல்லைக்கு அருகேயுள்ள கிராமங்களிலிருந்தும், பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகேயுள்ள கிராமங்களிலிருந்தும் இதேபோன்ற தகவல்கள் கிடைத்துள்ளன. பூஞ்ச் மாவட்டத்தின் சலோத்ரி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஃபரூக் கூறுகையில், "சூழ்நிலை பதட்டமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க எப்போதும் போல எங்கள் வீரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்" என்றார் உறுதியான குரலில்.
கிராம மக்கள், எல்லையின் அக்கரையில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கும் அவர்களது எஜமானர்களுக்கும் எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நிராயுதபாணிகளான, அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கமாக உள்ளது.
துணிச்சல்
இந்த கடினமான காலத்திலும், எல்லையோர கிராம மக்கள் தங்கள் வாழ்வாதார சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பாதுகாப்பிற்காக உறுதியாக நின்று, பாதுகாப்புப் படையினருக்கு மனோபலம் அளித்து வருகின்றனர். அவர்களின் அச்சமும், அதேசமயம் அசாத்திய துணிச்சலும் போற்றுதலுக்குரியது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த அரசியல் சூழலுக்கு மத்தியில், தங்கள் அன்றாட வாழ்க்கையை அச்சத்துடன் கழித்து வரும் எல்லையோர மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications