பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிப்பு.. இந்திய தரப்பில் இழப்புகள் ஏதும் இல்லை..ராணுவம் விளக்கம்
டெல்லி: இன்று 9 மணியளவில் இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் & உதம்பூர் ஆகிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. ஆனால் இதனை இந்திய ராணுவம் முறியடித்தது என்றும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் இழப்புகள் ஏதும் இல்லை எனவும் இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்து பதில் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையினை இந்தியா மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

சுட்டு வீழ்த்திய இந்தியா
மேலும் பாகிஸ்தான் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை 15 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாகவும், இந்தியா இதனை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். முக்கிய நகரங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த இருந்த நிலையில் இதனை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து விட்டது. தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது.
அப்போது கூறிய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை செயல்பாட்டில் தான் இருக்கிறது என்று கூறினார். அதனை தொடர்ந்து இன்று இரவுக்குள் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. குறிப்பாக இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் 3 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
உஷார் நிலை
தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. எனினும் பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளையும் இந்தியா தவிடுபொடியாக்கி வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு வருகின்றன. சண்டிகர், ஸ்ரீநகர், குல்லு, லூதியானா என முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் அங்கு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்துகொண்டிருந்த பஞ்சாப் - டெல்லி மேட்சும் பாதியில் நிறுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூட பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இப்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய ராணுவம் விளக்கம்
இந்த நிலையில் இன்று இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜம்மு, பதான்கோட் & உதம்பூர் ஆகிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. பாகிஸ்தானின் இந்த அச்சுறுத்தல் உடனடியாக முறியடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தனது இறையாண்மை மற்றும் மக்களை பாதுகாக்க இந்தியா முழு அளவில் தயராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்
முன்னதாக இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமா என்பது குறித்து பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், முப்படை தளபதிகள் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடியை கொடுக்க தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு பதில் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications