பூதாகரமாக வெடித்த அதானி விவகாரம்.. விவாதிக்க அனுமதி மறுப்பு! 3வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
டெல்லி: அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இன்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டபோது, அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அதானி மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. குறிப்பாக நாட்டின் வளங்களை அதானி எனும் தனி நபருக்காக மத்திய அரசு வாரி வழங்குகிறது என்றும், அவரை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் எனவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் அமெரிக்காவில் அதானி குழுமம் மீதும், அதானி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரிகளுக்கு ரூ.2000 கோடி வரை லஞ்சம் கொடுக்க அதானி முன்வந்ததாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளுக்கு லட்டு போல வாய்ப்பை உருவாக்கிவிட்டது. ஏற்கெனவே ஹிண்டன்பர்க் செய்த சம்பவத்தில் அதானி மீதும், மத்திய அரசு மீதும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக அட்டாக் செய்திருந்தன. இப்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நேரமாக பார்த்து அமெரிக்க நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது பேசுபொருளாகியிருக்கிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே, அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறியிருந்தனர்.
இதனையடுத்து கடந்த 3 நாட்களாக இந்த பிரச்சனையை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எழுப்பி வருகின்றன. 3வது நாளான இன்று அதானி ஊழல் புகார், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக்குழு இதனை விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் இரு அவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தின் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடிப்பதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த கேட்டால், அதை அரசு புறக்கணிக்கிறது என்றும், அவர்கள்தான் நேரத்தை வீணடிக்க எங்களை உந்தி தள்ளுகிறார்கள் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முன்னதாக நேற்று நாடாளுமன்றத் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த ராகுல் காந்தி, "சின்ன சின்ன குற்றத்திற்காக நூற்றுக்கணக்கானோர் சிறையில் இருக்கின்றனர். ஆனால் அதானி மீது ஆயிரம் கணக்கான கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்திருக்கிறது. இருப்பினும் ஏன் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை? அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
முன்னதாக இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரியங்கா காந்தி பதவியேற்றுக்கொண்டார். பிரியங்கா எம்பியாவது இதுவே முதல்முறையாகும். அதேபோல ராகுலும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், தாய் சோனியா காந்தியும் இன்று ஒன்றாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் இப்படி ஒன்றாக வருவது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications