அமெரிக்காவில் இருந்து கை விலங்குடன் இந்தியர்கள் நாடு நடத்தல்-நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்
டெல்லி: அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு கை விலங்குகளுடன் விமானத்தில் ஏற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டது குறித்து மத்திய பாஜக அரசு ஏன் மவுனமாக இருக்கிறது என்பதும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்வி.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வ்ருகின்றனர்.

அமெரிக்காவில் சுமார் 7.5 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளார். இவர்களில் சுமார் 2,000 பேர் அமெரிக்கா- கனடா எல்லைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா கைது செய்த இந்தியர்களில் 205 பேரை கை விலங்கிட்டு ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தியது. 205 பேருடன் அமெரிக்காவின் ராணுவ விமானம் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா, உபி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதனிடையே அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக மத்திய அரசு கனத்த மவுனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் நேற்று முதல் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்னதான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 11 மணிக்கு கூடியது. நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு சபைகளிலும் இந்தியர்கள் கை விலங்குடன் நாடு கடத்தப்பட்டது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரு சபைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பகல் 12 மணிக்கு சபை கூடிய போதும் அமளி நீடித்ததால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications