குடியரசு தலைவர் தேர்தல் அன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்? பாஜகவின் திட்டம் என்ன?
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள ஜூலை 18 ஆம் தேதி நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடரை கூட்ட ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரத்துக்கான கேபினட் அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மழைகால கூட்டத் தொடர்
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடரை நடத்துவது குறித்த அமைச்சரவைக் கூட்டம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள ஜூலை 18 ஆம் தேதி நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரை கூட்ட அந்த குழு பரிந்துரைத்து இருக்கிறது.

வெங்கய்யா நாயுடு ஓய்வு
17 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த கூட்டம் ஆகஸ்டு 12 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்திய குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலம் ஆகஸ்டு 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் தலைமையில் நடைபெறும் கடைசி மாநிலங்களவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத் தொடருடன் அவருக்கு பிரிவு உபசார விழாவும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மசோதாக்கள்
இந்த மழைக் காலக் கூட்டத்தொடரில் 4 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருக்கிறது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற திட்டமிட்டு நிறைவேற்றப்படாத மசோதாக்களையும் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. எனவே இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தலை பொருத்தவரை வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கி இருக்கிறது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திவரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை குடியரசுத் தலைவராக நியமிக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் அதே நாளில் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுவது கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications