லண்டன் பேச்சு- ராகுல் மன்னிப்பு கேட்கனும்- லோக்சபாவில் ராஜ்நாத்சிங் தீர்மானம்-எதிர்க்கட்சிகள் அமளி!
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக லோக்சபாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் முடங்கின. ராகுல் காந்தி விவகாரத்தால் ராஜ்யசபாவும் முடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இன்று காலை லோக்சபா சபை நடவடிக்கைகள் தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார். லண்டன் சென்ற ராகுல் காந்தி அங்கு அளித்த பேட்டி ஒன்றில் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார். இதனால் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார் ராஜ்நாத்சிங். அதில், ராகுல் காந்தியின் விமர்சனங்களை நாடாளுமன்றம் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
ராகுல் காந்திக்கு எதிரான இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் ராகுலை கண்டித்து பேசினார். இதனால் சபை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.இதனையடுத்து லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்யசபாவிலும் ராகுல் காந்தி விவகாரம் சபை நடவடிக்கைகளை முடக்கியது. ராஜ்யசபாவில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், ராகுல் காந்தியை கண்டித்து பேசினார். நாட்டு மக்களையும் நாடாளுமன்றத்தையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தி விட்டார். ஆகையால் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அதேபோல் லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்திலும் உரையாற்றினார் ராகுல். அங்கு பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்கத்தான் ஒற்றுமை யாத்திரை நடத்தப்பட்டது என்றார். மேலும் இந்தியாவின் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துமே தாக்கப்படுகின்றன; ஒடுக்கப்படுகின்றன. இதனால் மக்களின் குரலை வெளிப்படுத்துவதில் நெருக்கடி உருவாகி இருக்கிறது என்றார் ராகுல் காந்தி. இந்த பேச்சுதான் இப்போது சர்ச்சையாகி நாடாளுமன்றத்தை முடக்கியது.












Click it and Unblock the Notifications