பதான் சர்ச்சை: துணிவு இருந்தால்..இப்படி செய்யுங்க பார்க்கலாம்..ஷாருக்கானுக்கு கிரிராஜ் சிங் சவால்
டெல்லி: பாலிவுட் இயக்குநர்களும் நடிகர்களும் இந்துக்களை ஏளனம் செய்யும் வகையில் படங்களை எடுப்பதாக பதான் பட விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஷாருக்கானை கடுமையாக சாடியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள திரைப்படம் பதான். இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்க்கு வர உள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

காவி நிற உடையை அணிந்து
இந்தப் படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' கட்ந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் பாடலை தற்போது வரை 6 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 3 நிமிடங்கள் ஓடும் இந்த பாடல் காட்சியில் இடம் பிடித்துள்ள சில காட்சிகள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளன. அதாவது பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடும் தீபிகா படுகோன் காவி நிறத்தில் ஆன உடையை அணிந்து இருக்கிறார். மிகவும் நெருக்கமாக ஷாருக்கானுடன் இணைந்து ஆடுவது போல இந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்து அமைப்புகள் எதிர்ப்பு
இந்துக்களின் புனித நிறமான காவி நிறத்தில் ஆன உடையை அணிந்து கொண்டு தீபிகா படுகோன் ஆடியிருப்பதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சாதுக்கள், சாமியார்கள் அணியும் காவி நிற உடையை அணிந்து கொண்டு தீபிகா படுகோன் இப்படி கவர்ச்சியாக ஆடுவது இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாக இந்துத்வா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ளன.

ஷாருக்கானின் உருவ பொம்மை எரிப்பு
பாஜக அமைச்சர்கள் சிலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, பதான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை மாற்றாவிட்டால் மத்திய பிரதேசத்தில் படத்திற்கு அனுமதி மறுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். அதேபோல் மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் ஷாருக்கானின் உருவ பொம்மையை எரித்து இந்துத்வா அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந்துக்களை ஏளனம் செய்யும் வகையில்..
இதனிடையே, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் பதான் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இஸ்லாம் குறித்து இப்படி படம் எடுக்க முடியுமா? என ஷாருக்கானுக்கு கேள்வியும் எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக கிரிராஜ் சிங் கூறுகையில், ''பாலிவுட் சூப்பர்ஸ்டர் ஷாருக்கான் இஸ்லாம் குறித்தோ இறைதூதர் குறித்தோ இப்படி ஒரு படம் எடுத்தால் நாங்கள் அவரை மதசார்ப்பற்ற நபர் என்று கருதுவோம். பாலிவுட் நடிகர்களும் இயக்குனர்களும் இந்துக்களை ஏளனம் செய்யும் வகையில் படங்களை தயாரிக்கின்றனர்" என்றார்.

ஆட்சேபத்துக்குரிய காட்சிகள்
முன்னதாக சாத்வி பிரக்யாவும் ஷாருக்கான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். அதேபோல், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் பாடலில் உள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு மத்தியில், பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் என்னை பாதிக்காது
பதான் பட சர்ச்சைக்கு மத்தியில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷாருக்கான், சமூக வலைத்தளங்களில் குறுகிய கண்ணோட்டத்துடன் பிற்போக்குத்தனமாக இயங்குகின்றன. மோசமான கருத்துக்களை வெளியிடுகின்றனர். என்னை சுற்றி பல விஷயங்கள் நடந்தாலும் நான் பாசிட்டிவ் ஆகவே இருப்பேன். எனக்கு எதிரான கருத்துக்கள் என்னை பாதிக்காது" என்றார்.












Click it and Unblock the Notifications