இந்த 2 விஷயம்.. பிரதமர் வாயே திறப்பது இல்லை, கவனித்தீர்களா.. ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்பட இந்தியாவில் நிலவும் பிரச்சனைகளால் இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கோபத்தில் உள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதுபற்றி பேசாமலே உள்ளார்'' என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவில் மக்கள் அதிகளவில் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தீர்வு காண்பதில்லை என தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பிரசாரங்களிலும் மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
குறிப்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கடுமையாக தாக்கி பேசினர். குஜராத் மாடல் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்ததாக கூறினர். அத்துடன் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறுதொழில் செய்பவர்கள் முடங்கி உள்ளதாக குற்றம்சாட்டினர்.

அடிப்படை வசதிகள் குறைபாடு
மேலும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதாகவும் காங்கிரஸ் கூறியது. இதுதவிர அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் 9 பிரதமர்களை உருவாக்கியுள்ள உத்தர பிரதேசத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதோடு, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளதாகவும், வேலையின்மை சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் புள்ளி விபரங்ளோடு தெரிவித்தார்.

பேசாத பிரதமர்
இந்த நிலையில் தற்போது ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில், ‛‛இந்தியாவில் இன்று வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, சமூக அமைதியின்மை ஆகியவை நாட்டில் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. இதனால் இளைஞர்கள் கோபமடைந்துள்ளனர். இது பெரிய பிரச்சனையாக உள்ளபோது தீர்வு காண்பது தொடர்பாகவோ, பிரச்சனை குறித்தோ பிரதமர் நரேந்திர மோடி பேசவே இல்லை. "என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

வீடியோ
மேலும் இந்த பிரச்சனையில் உத்தரபிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் கோபத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் இன்று ஆறாவது கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ராகுல்காந்தி வீடியோவுடன், டுவிட்டரில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங் கூறியது என்ன
முன்னதாக கடந்த மாதம் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடியோ பதிவு மூலம் மத்திய அரசை விமர்சனம் செய்திருந்தார். அதில், ‛‛இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறி வருகின்றனர். இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைள் தான் காரணம். மத்திய பாஜக அரசுக்கு பொருளாதார கொள்கைகள் குறித்த புரிதல் இல்லை. இதுதவிர பிற நாடுகளுடனான வெளியுறவு கொள்கையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது'' என விமர்சித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications