"பாசிச பாஜகவுக்கு திராவிட மண்ணில் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.. " லோக்சபாவில் ஆ.ராசா சீற்றம்
டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுக எம்பி ஆ ராசா பேசினார். அப்போது பேசிய அவர், 240 எம்.பிக்களை மட்டுமே பெற்றுள்ள பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடையாது என்ற அவர் பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம் என்றும் பாசிச கொள்கைகள் என்றும் விமர்சித்தார்.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. லோக்சபா தேர்தலில் வென்ற எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்பி ஆ ராசா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
ஆ ராசா பேச்சு: பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம் என்று விமர்சித்த திமுக எம்பி ஆ.ராசா, லோக்சபாவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லை என்றும் 240 எம்.பிக்களை மட்டுமே பெற்றுள்ள பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடையாது என்றும் தெரிவித்தார். சிறுபான்மையினர், பட்டியலினத்தோரை மத்திய அரசு ஒடுக்கப்பார்க்கிறது என்ற அவர் மத்திய அரசு நினைப்பதைக் குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலம் சொல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடம் புகட்டிவிட்டனர்: மேலும், திராவிட மண்ணில் பாசிச பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டினர் என்ற அவர், திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜக உணர வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய திமுக எம்பி ஆ ராசா, "இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தார் தான்.. அதன் தவறை ஒப்புக் கொண்டு அவர் மன்னிப்பும் கேட்டார். எமஜென்சிக்காக இந்திரா காந்தி பல முறை மன்னிப்பு கேட்டார். அந்த மன்னிப்பை மக்கள் ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாகவே மக்கள் அவரை மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம்.. எனவே, பாசிச பாஜகவுக்கு எமர்ஜென்சி குறித்துப் பேச அருகதை இல்லை. நான் பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து இங்கு வந்து இருக்கிறேன்.. பரப்புரைக்காகப் பிரதமர் மோடி 8 முறை வந்தும், திராவிட மண்ணில் பாசிச பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.
திராவிட கொள்கை: ஏன் திராவிட கொள்கை தேவை என்பதை பாஜக உணர வேண்டும். தமிழ்நாடு சட்டசபையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 கோடி மக்களின் பிரதிநிதியாகத் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. நீட் தேர்வு மூலம் மெரிட், மேனேஜ்மெண்ட், பேமண்ட் என 3 பிரிவுகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.. நீட் அநீதி காரணமாக நாம் 20 பேரை இழந்துள்ளோம்.
பிரதமர் மோடியை கடவுளின் தூதராகக் கூட ஏற்ற தயாராக இருக்கிறோம். அத்தகைய தகுதிகள் மோடிக்கு இருக்க வேண்டும். ஆனால் அந்த தகுதிகள் அவருக்கு இல்லை என்பதே பிரச்சினை.. இதனால் தான் அவரை கடவுளின் தூதராக நம்ப முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications