ஜல்லிக்கட்டு எங்கள் கலாச்சாரம்.. பாரம்பரியமே பறிபோகும்.. பீட்டாவிற்கு எதிராக தமிழக அரசு சரமாரி வாதம்
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடைகோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு முன் நடக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதம் வைத்து உள்ளது.
ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் இந்த போட்டிக்கு எதிராக இவர்கள் தொடுத்த வழக்கு இன்று அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த அமர்வில் தமிழ்நாடு அரசு வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

ஜல்லிக்கட்டு
ஆனால் வழக்கு உடனடியாக தள்ளுபடி செய்யப்படவில்லை. இதையடுத்து கூடுதல் ஆவணங்களை வழக்கில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது. இதற்காக விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்தார். ஆனால் இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இன்று வழக்கு கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

ஜல்லிக்கட்டு வழக்கு
இந்த வழக்கில் கடந்த முறை வைக்கப்பட்ட வாதத்தில், காளைகளை வீரர்கள் துன்புறுத்துகிறார்கள். விலங்குகள் கொல்லப்படுகின்றன. கொடுமைகள் நடக்கின்றன. சட்டப்படி இது தவறு. ஆனால் தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து உள்ளது. இந்த சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும். எனவே உடனடியாக ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும். ஜனவரி மாதம் போட்டி நடப்பதால் வழக்கில் தாமதம் இன்றி விசாரணை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்தது.

காளைகள்
இதையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வ வாதம் வைத்து உள்ளது. அதில், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்பே ஜல்லிக்கட்டு கொண்டு வந்தோம். ஜல்லிக்கட்டு சட்டப்படிதான் நடக்கிறது. காளைகள் துன்புறுத்தப்படவில்லை. இந்த கலாச்சார ரீதியான விளையாட்டு. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டின் போது மாடுகள் அதிகம் மதிக்கப்படும். அப்படி இருக்கும் போது காளைகளை துன்புறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை. அப்படி இருக்கும் போது இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க கூடாது.

மனு
இது கலாச்சாரத்துடன் ஒன்றிய விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு தடை விதித்தால் கலாச்சாரமும் பறிபோகும். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் பறிபோகும். பல ஆண்டுகளாக நடக்கும் இந்த விளையாட்டு தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும். விலங்கு வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையான தடை விதிக்கக்கூடாது. விலங்கு வதை நடைபெறவில்லை. முழு பாதுகாப்போடுதான் போட்டி நடக்கிறது.

விசாரணை
அனைத்தையும் ஆய்வு செய்த பின்னரே இந்த அனுமதியை வழங்கி இருக்கிறோம் என்று தமிழ்நாடு அரசு தனது வாதத்தில் தெரிவித்து உள்ளது. முன்னதாக இந்த வழக்கில் மதுரை தொகுதியின் எம்.பி சு.வெங்கடேசன் எம்.பி தன்னையும் மனுதாரராக இடையீட்டு மனு மூலம் சேர்த்துக்கொண்டார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்தரநாத் எம்.பி ஆகியோரும் மனுதாரர்களாக இணைந்தனர். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் இதில் மனுதாரராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications