லாஸ்ட் சான்ஸ்! ஏமனில் சிக்கிய.. கேரள செவிலியர்! காப்பாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
டெல்லி: ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியரை காப்பாற்ற வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது.
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. எனவே உடனடியாக மத்திய அரசு இந்த விவகாரங்களில் தலையீடு செய்து நிமிஷாவை மீட்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த மனு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ராகேந்திர பசந்த் வலியுறுத்தியுள்ளார்.
ஷரியத் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் "இரத்தப் பணத்தை" ஏற்க ஒப்புக்கொண்டால் ஒருவரை விடுவிக்க முடியும் என்றும், அந்த விருப்பத்தை ஆராய பேச்சுவார்த்தை நடத்த முடியும். நிமிஷாவை காப்பாற்ற இருக்கும் கடைசி வாய்ப்பு இதுதான் என்று பசந்த் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். வழக்கை பட்டியலிடுவது தொடர்பான விசாரணையில், "நிமிஷாவுக்கு ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டது" என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த வழக்கறிஞர், நிமிஷா கேரளாவை சேர்ந்த ஒரு இந்திய குடிமகள். அவர் ஏமனில் வேலைக்காக சென்றிருந்தார். ஆனால் அங்கு குறிப்பிட்ட நபரால் கொடுமையை எதிர் கொண்டதாகவும், இதற்கு எதிரான நடவடிக்கையின் போது அந்த குறிப்பிட்ட நபர் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
விவரங்களை கேட்டு தெரிந்துக்கொண்ட நீதிமன்றம், வழக்கை வரும் 14ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடுவதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் மரண தண்டனைக்கு வெறும் 2 நாட்களுக்கு முன்னர் வழக்கு விசாரணை வரும் என்பதால், நிமிஷாவை காப்பாற்ற வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே கிடைக்கும். எனவே வழக்கு விசாரணையை இன்று அல்லது நாளைக்கு பட்டியலிட வேண்டும் என்று வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
வழக்கின் பின்னணி:
கடந்த 2008ம் ஆண்டு நிமிஷா ஏமனில் வேலைக்கு சென்றார். அங்கு செவிலியராக பணியாற்றி இவர், தனது கணவர் மற்றும் குழந்தையையும் பின்னர் ஏமனுக்கு அழைத்துக்கொண்டார். கொஞ்சம் ஆண்டுகள் இருவரும் அங்கு வேலை பார்த்தனர். ஆனால், வருமானம் போதுமானதாக இல்லை. எனவே, குழந்தையும் கணவரும் கடந்த 2014ல் மீண்டும் கேரளாவுக்கே திரும்பி வந்துவிட்டனர்.
நிமிஷா வருமானத்திற்கு புதிய யோசனையை கண்டுபிடித்தார். அதாவது ஏமனில் புதியதாக மருத்துவமனையை அமைப்பதுதான் அது. ஆனால் அந்நாட்டின் சட்டத்தின்படி, புதிய மருத்துவமனையை உருவாக்க வேண்டும் எனில், அந்நாட்டு பிரஜை ஒருவர் அதில் பங்குதாரராக இருக்க வேண்டும். எனவே தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் இணைந்து 2015ல் மருத்துவமனையை ஒருவாக்கினார். எல்லாம் ஓகேவாக போய்க்கொண்டிருந்த நேரத்தில், தலோல் அப்டோ மஹ்தி, நிமிஷாவிடம் அத்துமீற தொடங்கியிருக்கிறார்.
இந்த கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாத நிமிஷா, தலோல் அப்டோ மஹ்திடம் உள்ள தன்னுடைய பாஸ்போர்ட்டை மீட்க முயன்றிருக்கிறார். இந்த முயற்சியில் தலோல் அப்டோ மஹ்தி உயிரிழந்துவிடவே, நிமிஷா மீது அது கொலை வழக்காக திரும்பியுள்ளது.
ரத்த பணம் என்றால் என்ன?
ஏமன் சட்டப்படி, கொலை குற்றவழக்கில் சிக்கியவர்கள் விடுதலை பெற ரத்தப்பணம் ஒரு வாய்ப்பு. அதாவது கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் பொதுமன்னிப்பை வழங்கலாம். இதற்காக நிவாரணமாக குற்றம்சாட்டப்பட்டவர் பணம் கொடுக்கப்பட வேண்டும். இதைத்தான் ரத்தப்பணம் என்பார்கள்.












Click it and Unblock the Notifications