Petrol Diesel Price: ஹார்மூஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்.. பெட்ரோல், டீசல் விலை உயருமா? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு
டெல்லி: ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. அந்த வழியாக வரும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தும் உள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கச்சா எண்னெய் விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது நாளாக விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயருமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் அளித்த பதிலை பார்க்கலாம்.

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவிப்பு
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. 4-வது நாளாக இந்த சண்டையானது தீவிரம் அடைந்துள்ளது. கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்கா - இஸ்ரேலை பழித் தீர்ப்போம் என்றுஅறிவித்துள்ள ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
பக்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி ஆகிய நாடுகளில் உள்ள அமெ ரிக்கா தளங்கள் குறி வைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது உலகளாவிய எரிசக்தி பாதையாக ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எரிபொருள் சப்ளை பாதிக்கப்படும்?
இதனால் எண்னெய் ஏற்றி செல்லும் கப்பல்கள் அந்த பாதையை பயன்ப்டுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எரிபொருள் சப்ளை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
25 நாட்களுக்கு தேவையான எரிபொருள்
இந்த நிலையில், தற்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவிடம் 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஸ்டாக் இருப்பதாகவும் இதனால், விலை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றுவழியை இந்தியா ஆராய தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய், எல்.பிஜி மற்றும் எல்.என்.ஜி ஆகியவற்றை பிற நாடுகளிடம் இருந்தும் இறக்குமதி செய்து நெருக்கடியை சமாளிப்பது பற்றி இந்தியா ஆலோசித்து வருகிறது.
மீண்டும் ரஷ்யாவிடம் வாங்குகிறதா?
இதன்படி, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகப்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை எனவும், ஹார்மூஸ் ஜலசந்தியில் வரும் நாட்களில் உள்ள நிலவரத்தை சார்ந்து இது மாறுபடும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஹார்மூஸ் ஜலசந்தி
ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள இந்த ஜலசந்தி பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடனும், அதற்கு அப்பால் அரேபியக் கடலுடனும் இணைக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் மற்றும் ஓமன் எல்லையாக இருந்தாலும், இது ஒரு சர்வதேச கப்பல் வழித்தடமாக உள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையே தாக்குதல் நடந்து வரும் நிலையில், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றி வந்த 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.
எந்த கப்பலும் வரக்கூடாது
தற்போது ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்து இருக்கிறது. அதுமட்டும் இன்றி ஜலசந்தியை கடக்க முயலும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் புரட்சிகர காவல்படை தலைமைத் தளபதியின் ஆலோசகரான இப்ராகிம் ஜப்பாரி கூறும்போது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதிக்கு எந்த கப்பலும் வரக்கூடாது. மீறி வந்தால் நிச்சயமாக கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடும்" என்றார்.
இதுவே முதல் முறை
சுமார் 35 கிலோமீட்டர் அகலம், 165 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் இந்தியா உள்ளிட்ட உலகளாவிய எரிசக்தி சந்தைகளைப் பாதிக்கும். இந்தியா தனது இறக்குமதிகளுக்கு இந்த வழியையே பெரிதும் நம்பியுள்ளது என்பதால், இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சத்தால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக விலையேற்றத்தை சந்தித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்னெய் ஒரு பேரல் 79.44 டாலராக இருந்த நிலையில், தற்போது 82.37 டாலராக உயர்ந்துள்ளது. ஜனவரி 2025 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவு கடுமையாக உயர்ந்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications