பெட்ரோல், டீசல் விலை உயர்வு! வேலையை காட்டிய மத்திய அரசு! கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு?
டெல்லி: இன்று அதிகாலை நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு ஷாக் கொடுத்திருக்கிறது. எரிபொருள் விலையை உயர்த்துவது குறித்து ஐடியா எதுவும் இல்லை என்று சொல்லிக்கொண்டு, மறுபுறம் மத்திய அரசு விலையை உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை எரிபொருளுக்கு நாம் வெளிநாடுகளைதான் பெரிதும் நம்பியிருக்கிறோம். அதிலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து குறிப்பிட்ட அளவு எரிபொருளை வாங்கி வருகிறோம். இப்போது அங்கு நிலைமை சரியில்லாததால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை, எரிபொருள் விலையை உயர்த்துவது குறித்து ஐடியா இல்லை என்று மத்திய அரசு அடித்து சொன்னது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அமைச்சர்கள் சொன்ன முக்கிய வாக்குறுதி பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்பதுதான்.
சமீபத்தில் கூட பெட்ரோல், டீசல் விலை உயரும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியபோது, பெட்ரோலிய அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ 'X' தளத்தில் அதனை போலிச் செய்தி என்று குறிப்பிட்டு, "மத்திய அரசிடம் விலை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை" என்று கூறியிருந்தது.
அதேபோல ஆந்திரா போன்ற மாநிலங்களில் பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தபோது, மத்திய அரசின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, "தேர்தலுக்குப் பிறகு விலையை உயர்த்தும் எந்த முன்மொழிவும் அரசிடம் இல்லை. போதிய அளவு எரிபொருள் இருப்பு உள்ளது, யாரும் பயப்பட வேண்டாம்" என்று அவர் உறுதி அளித்திருந்தார்.
இது போதாது என்று ஹர்தீப் சிங் பூரியும் வாக்குறுதி கொடுத்திருந்தார். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பெட்ரோல் விலை பெருமளவு நிலையாக உள்ளது. தேர்தல் முடிந்துவிட்டாலே விலை ஏறும் என்று நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளாதீர்கள். திடீர் விலை உயர்வு இருக்காது" என்று கூறி இருந்தார்.
இப்படியாக மத்திய அரசு தரப்பில் விலையேற்றம் இருக்காது என வாக்குறுதி கொடுக்கப்பட்டாலும், இதற்கு எதிர்மாறாக இன்று அதிகாலை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அப்படியெனில் மத்திய அரசு சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு? என பொதுமக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.
அதேபோல 2022க்கும் 2026க்கும் இடையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்தது. ஆனாலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறக்கவில்லை.
2024-ல் கச்சா எண்ணெய் சராசரியாக $75 - $85 என்ற அளவில் இருந்தது. குறிப்பாக, பிப்ரவரி 2026-க்கு சற்று முன்பு வரை அதாவது 2025-ன் பிற்பாதியில், ஒரு பேரல் விலை $65 - $71 வரை கூடச் சரிந்தது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. எனவே இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது மட்டும் விலையை ஏற்றுவது எந்த வகையில் நியாயம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.












Click it and Unblock the Notifications