பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை உயர வாய்ப்பு.. இன்னும் 5 நாட்களில் மத்திய அரசு எடுக்கும் முடிவு!
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.4 முதல் ரூ.5 வரையிலும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை சுமார் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் இந்த விலை உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மே 1 ஆம் தேதியான இன்று திடீரென வணிக கேஸ் சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை 40 - 50 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின் எரிபொருட்களின் விலை முதல் முறையாக உயரும். மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால், சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலை உயர்வு தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், ஒரு வாரத்திற்குள் விலை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் 5 முதல் 7 நாட்களுக்குள் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டால், போக்குவரத்துக்கான செலவுகள் அதிகரிக்கும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வுக்கு மத்தியிலும், நான்கு ஆண்டுகளாக சில்லறை விலையில் மாற்றமில்லாமல் இருந்ததால், இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்படவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வாரம், சர்வதேச கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு ஒன்றுக்கு 126 அமெரிக்க டாலர் என்ற நான்கு ஆண்டு கால உச்சத்தை எட்டியது. பிறகு சற்று குறைந்தாலும், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டதாலும், முடங்கியுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்க மற்றும் ஈரான் தலைவர்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டதாலும், பீப்பாய் ஒன்றுக்கு 110 அமெரிக்க டாலருக்கு மேல் நீடித்தது.
உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பெட்ரோல் விலை மாற்றமில்லாமல் இருந்தது. ஏப்ரல் 29 அன்று மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு, பெட்ரோலின் விலை உயரக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் முன்னதாகவே சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை உயர்வைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு சுமார் ரூ.4 முதல் ரூ.5 வரையிலும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை சுமார் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் அதிகரிக்கக்கூடும். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 2022 முதல் சில்லறை விலைகள் பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் முதல் உயர்வாக இது இருக்கும்.
முன்னதாக, வணிக சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "தேர்தலுக்கு பிறகு பணவீக்கத்தின் தாக்கம் இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தேன். இன்று வணிக சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் விலை உயர்ந்துள்ளது இதுவே. இதன் தாக்கம் உங்கள் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும். முதலில் எரிவாயுவின் மீது தாக்குதல். அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீது தாக்குதல் நடக்கும்." எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications