ரூ.971 கோடி செலவு.. 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமான பணியை போட்டோ, வீடியோ எடுக்க தடை.. மோடி அரசு உத்தரவு
டெல்லி: 'இந்தியா கேட்' அருகே 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் போட்டோ எடுக்க, வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் நாடளுமன்ற கட்டிடத்துக்கு மாற்றாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மத்திய அரசு கட்டி வருகிறது.
புதிய நாடாளுமன்றம் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது.

'சென்ட்ரல் விஸ்டா' திட்டம்
'சென்ட்ரல் விஸ்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துடன் மத்திய தலைமைச் செயலகம், குடியரசுத் தலைவர் பிரதமருக்கான வீடுகள், முக்கிய துறைகளுக்கான அலுவலகங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன. 'சென்ட்ரல் விஸ்டா'திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும்.

விறுவிறு கட்டுமான பணி
இதற்கான கட்டுமான பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பணிகளை முடித்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இப்போது இது தேவையா?
இது ஒருபுறம் இருக்க இந்தியா தற்போது கொடிய கொரோனாவால் மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஆக்சிஜன் கிடைக்காமல் தினம், தினம் உயிர்கள் பறிபோகின்றன. இந்த மோசமான நிலையில் 'சென்ட்ரல் விஸ்டா' தேவைதானா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இதற்கு செலவிடப்படும் தொகையை மக்களின் உயிர் காக்கும் சுகாதார திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட 12 கட்சிகள் கூட்டாக சேர்ந்து கடிதம் எழுதியுள்ளன. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் டெல்லியில் 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

போட்டோ, வீடியோ எடுக்க தடை
இந்த நிலையில் 'இந்தியா கேட்' அருகே 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் ''இங்கு புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது'' ''இங்கு வீடியோ எடுக்க அனுமதி கிடையாது'' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மத்திய பொதுப்பணித் துறை இதற்கான உத்தரவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மக்களும் கேள்வி
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் மத்திய பொதுப்பணி துறை புகைப்படம், வீடியோ எடுக்க தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் மக்கள் காற்றுக்காக(ஆக்சிஜன்) ஏங்கி வரும் வேளையில் அதற்கு செலவிடாமல், இந்த கட்டுமான பணிக்கு செலவிடுவது அவசியம்தானா? என்பதே பொதுமக்களின் கேள்வியாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications