“அச்சாணி”.. வளருதே ‘இந்தியா’ கூட்டணி! மும்பை எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மெகா திட்டம் -இதான் அஜெண்டா
டெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில் அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் வரும் ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுக்கூட்டங்களை கூட்டுவது, இதற்கான துணைக் குழுவை அமைப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் உள்ள கட்சிகள் மாநில அளவில் கூட்டணி வைத்து இருக்கும் கட்சிகளை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வைக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி இருக்கிறதாம். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களில் அக்கட்சியை வீழ்த்த துணைக் குழுக்கள் உதவும் என்பது இந்தியா கூட்டணி தலைவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல் இந்த மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தேசிய ஒருங்கிணைப்பாளரை நியமிப்பதற்கு பதிலாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த துணைக் குழுக்களிடம் அந்த பொறுப்பை பார்த்துக்கொள்ள சொல்லலாம் என்பது பல தலைவர்களின் விருப்பமாக உள்ளது.
அந்த குழுவே நிகழ்ச்சிகளையும், பிற கட்சிகளை ஒருங்கிணைப்பதையும் செய்யும் என்பதால் அவர்கள் இவ்வாறு கருதுகிறார்கள். அதேபோல் இந்தியா கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் முத்திரை குறித்தும் மூன்றாவது கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவசேனா (உத்தவ்), ஆகிய கட்சிகள் ஒருங்கிணைக்கின்றன. இதில் சுமார் 80 அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கூட்டணி மட்டுமின்றி தற்போதைய அரசியல், பொருளாதார சூழல், பாஜகவுக்கு எதிரான யுக்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்திலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான ஆலோசனைகள் இடம்பெறாது என்றும், தங்களுக்குள் உள்ள பூசல்களை களைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை வடிவமைத்த பிறகே இதை தொடர்வது பற்றி முடிவு செய்யப்படும் என கூறுகிறார்கள். தொகுதி பங்கீடு மற்றும் பிரதமர் வேட்பாளர் குறித்து இறுதிகட்டத்தில்தான் முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய கூட்டங்களில் பேசப்பட்டதைபோல் மத்தியில் பாஜக ஆட்சியை கற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணியை அமைத்து இருக்கிறார்கள் என்பதால் அவர்களின் முதல் நோக்கம் என்பது 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுப்பது பற்றிதான் இருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று மோடி 2 வது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றார்.
2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் மத்திய பாஜக அரசின் பதவி காலம் நிறைவடைய உள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலுக்காக இந்தியா என்ற கூட்டணியை அமைத்து இருக்கின்றன.












Click it and Unblock the Notifications