சினிமாவை விடமாட்டேன்.. அடம்பிடித்த சுரேஷ் கோபிக்கு மோடி - அமித்ஷா ‛ரெய்டு’.. உடனே நடந்த மாற்றம்
டெல்லி: மத்திய அமைச்சர் ஆனால் என்ன நான் எனது நடிப்பை விடமாட்டேன். ஒப்பந்தமாகி உள்ள திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன். ஏனென்றால் சினிமா என் உயிர் மூச்சு என்று நடிகர் சுரேஷ் கோபி பேசியிருந்தார். தற்போது படத்துக்காக அவர் வளர்த்த தாடியை ஷேவ் செய்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் விட்ட ‛ரெய்டு’ தான் காரணம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. இவர் பாஜகவில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். 2016 மத்ல 2022ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தார். அப்போதும் கூட அவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதன்பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சுரேஷ் கோபி பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.

கேரளாவில் மொத்தம் 19 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் தோற்றனர். ஆனால் சுரேஷ் கோபி மட்டும் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி அமைச்சரவையில் சுரேஷ் கோபிக்கு மத்திய இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது சுரேஷ் கோபி பெட்ரோல் மற்றும் சுற்றுலாத்துறையில் மத்திய இணை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சுரேஷ் கோபியிடம் பத்திரிகையாளர்கள், ‛‛மத்திய இணையமைச்சராகி உள்ளீர்கள். இனி திரைப்படங்களில் நடிப்பீர்களா?'' என்ற கேள்வியை முன்வைத்தனர்.
அதற்கு சுரேஷ் கோபி, ‛‛நான் ராஜ்யசபா எம்பியாக இருந்தபோது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தேன். அதேபோல் மத்திய இணையமைச்சரானாலும் கூட ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் நடிப்பேன். ஏனென்றால் சினிமா தான் என் உயிர்’’ என்று கூறியிருந்தார். சினிமாவில் நடிப்பேன் என்று அடம்பிடித்தபடி சுரேஷ் கோபி 22 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
அதோடு அவர் தனது 250வது படமான ஒத்த கொம்பன் திரைப்படத்துக்காக தாடி வளர்த்து வந்தார். இந்த சினிமா படப்பிடிப்பு என்பது அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் திரைப்படங்களில் நடிக்க சுரேஷ் கோபிக்கு அனுமதி அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தான் ஒப்பந்தமாகி உள்ள திரைப்படங்களில் நடிக்க அனுமதி கோரி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு சுரேஷ் கோபி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்துக்கு இருவரும் ஒப்புதல் வழங்கவில்லை.
மாறாக சுரேஷ் கோபிக்கு ‛ரெய்டு’ விட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சினிமாவை கைவிட்டுவிட்டு மத்திய இணையமைச்சர் பணியில் கவனம் செலுத்துவதோடு, திருச்சூர் லோக்சபா தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். சினிமாவில் இப்போது நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் சுரேஷ் கோபியின் போட்டோ ஒன்று பரவி வருகிறது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது முதல் சுரேஷ் கோபி முகத்தில் தாடி வளர்த்து வந்தார். தற்போது அவர் தாடியை ஷேவ் செய்துள்ளார். இதற்கு மோடி, அமித்ஷா விட்ட ‛ரெய்டு’ தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு சுரேஷ் கோபி தனது திரைப்படங்களின் படப்பிடிப்பை இப்போதைக்கு வேண்டாம் என்று தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக சுரேஷ் கோபி திருச்சூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் பொறுப்பை விரும்பினார். ஆனால் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி தான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுரேஷ் கோபி மத்திய இணையமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு எம்பியாக நீடித்து கொண்டு திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகவும் அப்போது தகவல் வெளியாகி சர்ச்சையான நிலையில் தற்போது இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications