கம்யூனிஸ்ட்+காங்கிரஸ் டிராமா.. கேரளாவில் ஆட்சியைப் பிடிப்போம்.. பிரதமர் மோடி கையில் எடுத்த மேட்டர்!
தென் மாநிலங்களில் வலுவாக களமிறங்க தயாராகி வரும் பாஜக, கேரளாவில் இந்த மேட்டரை கையில் எடுத்து களமிறங்க உள்ளது.
டெல்லி : பாஜக கேரளாவிலும் ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கேரளாவில் எதிரெதிர் கட்சிகளாக இருக்கும் மார்க்சிட்ஸ் மற்றும் காங்கிரஸ், திரிபுராவில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கட்சிகளின் கபட நாடகத்தை கேரள மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்ற உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது என விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகாவில் ஆட்சி புரியும் பாஜக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் வலுவாக கால்பதிக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா நிலையை வைத்து கேரளாவில் ஆட்சியைப் பிடிப்போம் எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

திரிபுரா நிலை
திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 33 இடங்களை கைப்பற்றி பாஜக - ஐபிஎஃப்டி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜக 32 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஐபிஎஃப்டி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும் காங்கிரஸும் இணைந்து தேர்தலை சந்தித்தனர். அங்கு சிபிஐஎம் 11 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களையும் திப்ரா மோதா கட்சி 13 இடங்களையும் பெற்று தோல்வியை சந்தித்தது.

நாகலாந்து
நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் (என்டிபிபி) 37 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளன. பாஜக 12 இடங்களிலும் என்டிபிபி 25 இடங்களையும் வென்றது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில் 37 இடங்களைப் பிடித்துள்ளதால் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் என்டிபிபி தலைவர் நெய்பியூ ரியோ.

மேகாலயா
மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 26 இடங்களை வென்றது. யுடிபி 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் பார்ட்டி நான்கு இடங்களையும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களையும் வென்றன. மேகாலாவில் அரசை அமைப்பதற்கு தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் மேகாலயா மாநில தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளாராம். இதைத் தொடர்ந்து பாஜகவின் 2 சீட் ஆதரவுடன் ஆட்சிக்கு வரவுள்ளது என்பிபி. ஆகமொத்தம் 3 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது.

மோடி உற்சாகம்
இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாகப் பேசியுள்ளார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை. பாஜக என்றால் தொழிலதிபர்களுக்கான கட்சி என எதிர்க்கட்சிகள் லேபிள்க ஒட்ட முயற்சித்தாலும், பழங்குடியின, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் பாஜகவுடன் தான் இருக்கிறார்கள் எனப் பேசினார் மோடி.

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில்
மேலும், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுளது. கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் மேகாலயா மற்றும் நகாலாந்திலும் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பாஜகவுக்கு எதிரான பொய்கள் படிப்படியாக அம்பலப்பட்டு வருவதால், வரும் காலங்களில் பாஜக மேலும் விரிவடையும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

கம்யூ + காங்கிரஸ்
வரும் ஆண்டுகளில் கேரளாவிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். கேரளாவில் எதிரெதிர் கட்சிகளாக இருக்கும் சிபிஐஎம் - காங்கிரஸ், திரிபுராவில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த இரு கட்சிகளின் கபட நாடகத்தை கேரள மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்ற உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது." எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

கேரளாவில்
கேரளாவில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் - சிபிஐஎம் கட்சிகள் திரிபுராவில் பாஜகவை எதிர்த்துக் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் பாஜக கூட்டணி அங்கு வென்றது. தென் மாநிலங்களில் வலுவாக களமிறங்க தயாராகி வரும் பாஜக, கேரளாவில் இந்த விஷயத்தை கையில் எடுத்து, காங்கிரஸையும், சிபிஎம்மையும் விமர்சித்து களமிறங்கும் எனக் கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாகவே பிரதமர் மோடியின் நேற்றைய பேச்சு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications