தங்கம் வாங்கினால் ஆபத்து.. மோடி சொன்ன முக்கியமான மேட்டர்.. என்ன காரணம்! பின்னணியில் நடப்பது என்ன
டெல்லி: போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே திடீரென சில கோரிக்கைகளை முன்வைத்தார். குறிப்பாக அடுத்த ஓராண்டுக்குத் தங்கத்தை வாங்க வேண்டாம் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த கோரிக்கைக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
சர்வதேச அளவில் நடக்கும் போர்கள் காரணமாக உலக பொருளாதாரமே இப்போது சிக்கலில் இருக்கிறது. கச்சா எண்ணெய், எல்பிஜி உள்ளிட்டவற்றின் சப்ளையும் சிக்கலில் இருக்கிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டிச் செல்வதால், இந்தியப் பொருளாதாரம் பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது.

தங்கம் வாங்க வேண்டாம்
இந்த இக்கட்டான சூழலில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி சில அதிரடி வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார். அதில் குறிப்பாக, "திருமணங்களுக்காகத் தங்கம் வாங்குவதை மக்கள் ஒரு வருடத்திற்குத் தள்ளிப்போட வேண்டும்" என்ற கோரிக்கை நகைப்பிரியர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
காரணம் என்ன
சர்வதேச போருக்கும் தங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.. காரணம் இல்லாமல் இல்லை.. தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை நாம் இறக்குமதி செய்யும்போது, டாலர் தான் கொடுக்க வேண்டும். இதனால் இந்தியாவிடம் உள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு வெளியே செல்லும். இதை ஆங்கிலத்தில் Forex Outflow என்று சொல்வார்கள். உலகம் இப்போது இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், இப்போது அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால் அது பெரிய சிக்கலை உருவாக்கும்.
அதிலும் தங்க இறக்குமதி தான் இந்தியாவுக்கு மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது. இந்தியா ஆண்டுதோறும் சுமார் 700 முதல் 800 டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் அந்நியச் செலாவணியைச் செலவிடுவது இந்தத் தங்க இறக்குமதிக்காகத்தான். பெட்ரோல், டீசல் கூட பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. ஆனால், தங்கம் அப்படி இல்லை. மக்கள் தங்கத்தை வாங்கி வைத்தால் அது பொருளாதார ஓட்டத்தில் இருந்து விலகியே இருக்கும். இதுவே சிக்கல்!
முடக்கப்பட்ட முதலீடு
மேலும், தற்போது போர் பதற்றத்தால் பெட்ரோல் இறக்குமதிச் செலவு தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், தங்கம் போன்ற அவசியமற்ற இறக்குமதிகளைக் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தைச் சமநிலைப்படுத்த முடியும் என அரசு கருதுகிறது. தங்கத்தின் மீதான மோகம் இந்தியர்களிடம் கலாச்சார ரீதியாக வேரூன்றி இருந்தாலும், பொருளாதார ரீதியாக அது ஒரு முடக்கப்பட்ட முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
தங்கம் வாங்குவதற்காகச் செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய் இந்தியாவை விட்டு வெளியேறுவது, தற்போதைய எரிசக்தி நெருக்கடியில் நாட்டின் நிதி நிலையை மேலும் பலவீனப்படுத்தும். எனவே, தேச நலனைக் கருத்தில் கொண்டு, தங்கம் வாங்குவதையும் ஆடம்பரச் செலவுகளையும் குறைப்பதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் என்பதே பிரதமர் பேச்சின் சாராம்சம்!
சுற்றுலா
மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாக்களைத் தவிர்த்து உள்நாட்டுச் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் 25 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியப் பணம் வெளியேறுவது தடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக, ஒரு மிகப் பெரிய உலகளாவிய பொருளாதாரச் சரிவிலிருந்து இந்திய ரூபாயின் மதிப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு சிக்கனத் திட்டமாகவே பிரதமரின் இந்தத் தங்கம் குறித்த வேண்டுகோள் பார்க்கப்படுகிறது.
அதாவது மிக அதிகளவில் தங்கம் வாங்குவது இந்திய பொருளாதாரத்தை ஆபத்தில் தள்ளும். மேலும், ரூபாய் மதிப்பையும் சரிவடைய செய்யும். இதன் காரணமாகவே தங்கம் வாங்குவதை ஓராண்டிற்குத் தள்ளிப் போடச் சொல்கிறார் பிரதமர் மோடி!














Click it and Unblock the Notifications