டென்மார்க் பிரதமரின் முதல் இந்தியப் பயணம்.. பிரதமர் மோடியுடன் இன்று நடந்த மீட்டிங்.. ஏன் முக்கியம்
டெல்லி: முதல்முறையாக இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் முதல்முறையாக அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். 3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
இன்று காலை இந்தியா வந்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனை விமான நிலையம் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். மேலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் டென்மார்க் பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

டென்மார்க் பிரதமர்
அதன் பிறகு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு நாட்டு நல்லுறவு குறித்தும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் வர்த்தகத்தை ஊக்குவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்வேகம் அளிக்கும் மோடி
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டுப் பிரதமர்களுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன், "இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது. சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் அடைய முடியும் என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவும் டென்மார்க்கும் உலகின் முக்கிய இரண்டு ஜனநாயக நாடுகள். இரு நாடுகளும் சர்வதேச விதிகள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் க்ளீன் எனர்ஜி திட்டத்தில் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்" என்றும் அவர் பேசினார்

மோடி பேச்சு
இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 'Green Strategic Partnership' முறையைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மீட்டிங் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட Green Strategic Partnership குறித்து இன்று மீண்டும் நடத்தினோம்" என்று கூறினார். Green Strategic Partnership என்பது பசுமை கூட்டாமை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு திட்டம் ஆகும்.
Recommended Video

இந்தியா டென்மார்க் உறவு
தற்போது இந்தியாவுக்கும் டென்மார்க்கிற்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டில் மிகவும் வலுவான தொடர்பு உள்ளது. டென்மார்க்கை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்து வருகின்றன. அதேபோல 60க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் டென்மார்க்கில் தொழில் செய்து வருகின்றன. இந்தச் சூழலில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது

முக்கிய ஒப்பந்தங்கள்
3 நாட்களுக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் இந்தியாவில் இருக்க உள்ள நிலையில், வரும் நாட்களில் இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மெட்டே பிரடெரிக்சன் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications