நாடாளுமன்ற திறப்பு விழாவை பட்டாபிஷேகம் என நினைக்கிறார் பிரதமர் மோடி.. ராகுல் காந்தி காட்டம்!
டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை தனக்கான முடிசூட்டு விழாவாக பிரதமர் மோடி நினைத்துக் கொள்கிறார் என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி.
டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மக்களவை, மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனைக் கூடங்களும் கட்டப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய நாடாளுமன்றங்களில் ஒன்றாக இந்திய பாராளுமன்றம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழ்நாட்டில் தயாரான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவின் முதல் குடிமகளான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தான் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், மத்திய அரசு பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என உறுதியாக இருந்ததால், எதிர்க்கட்சிகள் இன்றைய திறப்பு விழாவை புறக்கணித்தன.
காங்கிரஸ், திமுக உள்பட நாடு முழுவதுமுள்ள சுமார் 20 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துள்ள போதும், பாஜக அரசு திட்டமிட்டபடி, விமரிசையாக இந்த விழாவை நடத்தி வருகிறது. இன்று காலை ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு, செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது.
அதனை பிரதமர் மோடி லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார். தொடர்ந்து, சர்வமத பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு மதங்களைச் சேர்ந்த குருமார்கள், ஒன்றாக இணைந்து பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத் திறப்பு விழா நிகழ்வை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் படத்தோடு சவப்பெட்டி ஒன்றின் படத்தை இணைத்து ட்விட்டரில் பதிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. பாஜகவினர் ஆர்ஜேடிக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

ஆனால், ஆர்ஜேடி தலைவர் சக்தி சிங் யாதவ் தனது கட்சி சார்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார். தங்கள் கட்சி சார்பில் வெளியிட்டப்பட்ட ட்வீட்டில் உள்ள சவப்பெட்டி படம், ஜனநாயகம் புதைக்கப்பட்டிருப்பதை பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்ற திறப்பு விழாவை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் தனது ட்விட்டர் பதிவில், "நாடாளுமன்றம் என்பது மக்களின் குரல். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை தனக்கான முடிசூட்டு விழாவாக பிரதமர் நினைத்துக் கொள்கிறார்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications