3 மேட்டர்.. பிரதமர் மோடி போட்ட உத்தரவு! 2025, 2035, 2040 ஆண்டுகளில் மாஸ் சம்பவம் செய்யும் இஸ்ரோ
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இன்று அதிரடியாக 3 உத்தரவுகளை பிறப்பித்தார். இதன்மூலம் 2025, 2035, 2040 என 3 ஆண்டுகளை குறிப்பிட்டு பிரதமர் மோடி போட்ட உத்தரவால் மாஸ் சம்பவம் செய்ய இஸ்ரோ தயாராகி வருகிறது.
சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறக்கி சாதித்தனர். அதன்பிறகு விக்ரம் லேண்டர் மற்றும் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்தன.

நிலவின் தென்துருவத்தில் உள்ள தனிமங்கள், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திட்டமிட்டப்படி விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டன. தற்போது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் நிலவின் தென்துருவத்தில் உள்ளன.
அதேபோல் சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு சூரியனினின் வெளிப்புற பகுதி, காந்தபுலம் உள்ளிட்டவற்றறை ஆய்வு செய்ய உள்ளது. இந்த 2 திட்டங்களும் இப்போது இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் பெயர் பெற்று கொடுத்துள்ளது.
இந்நிலையில் தான் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்ட கூட்டம் நடத்தினார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ‛ககன்யான்' குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ‛ககன்யான்' திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டமான ககன்யான் திட்ட பணி தீவிரமாக நடந்து வருகிறது. ககன்யான் திட்டம் என்பது விண்ணில் செலுத்துவதற்கு முன்பு 20 முறை சோதனைகள் செய்யப்பட உள்ளது. மேலும் 3 முறை ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அக்டோபர் 21ல் ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி பல்வேறு அறிவுகளை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வழங்கினார். அதாவது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2025ம் ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும். 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு என்று பிரத்யேகமாக இந்திய விண்வெளி நிலையத்தை அமைக்க வேண்டும். மேலும் 2040ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து நிலவுக்கு விண்வெளி வீரரரை அனுப்ப வேண்டும். இந்த இலக்குகளை நிறைவேற்றும் வகையில் தீவிரமாக செயல்பட வேண்டும்.
விண்வெளி துறையில் நிலவு குறித்த ஆய்வுக்கான சார்ட்டுகளை உருவாக்கி படிப்படியாக அதனை நிறைவேற்றம் செய்ய வேண்டும். இந்தியாவின் அடுத்த தலைமுறை ராக்கெட்டான என்ஜிஎல்வி, புதிய விண்வெளி ஏவுதளம் அமைத்தல், ஆய்வு மையங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்'' என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
ககன்யான் என்பது பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் தெலைவில் உள்ள பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு விண்கலம் மூலம் மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். அங்கு ஆய்வுகளை செய்யும் விண்கலம் மொத்தம் 7 நாள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பும். இந்த ககன்யான் திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய 4வது நாடு என்ற பெயரை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர வீனஸ் ஆர்பிட்டர், மார்ஸ் லேண்டர் திட்ட பணிகளையும் மேற்கொள்ள பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications