‛வீல்சேரில் வந்து ஓட்டு’.. மன்மோகன் சிங்கை புகழ்ந்து பேசிய மோடி! ராஜ்யசபாவில் சுவாரசியம் - பின்னணி
டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். வீல்சேரில் வந்து அவர் ஓட்டளித்து தனது கடமையை செய்ததை பெருமைப்படுத்தி பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பிரதமர் மோடியின் இந்த திடீர் பாராட்டுக்கான காரணம் என்ன? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த மாதம் 31ம் தேதி இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். கடந்த 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதன்பிறகு பட்ஜெட் மீதான விவாதம் உள்பட பிற நாடாளுமன்ற நடைமுறைகள் நடந்து வந்தன. மேலும் ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி லோக்சபா, ராஜ்யசபாவில் உரையாற்றி நன்றி தெரிவித்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தான் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் நிதி மேலாண்மையில் ஏற்பட்ட தவறுகள் குறித்து மத்திய அரசு சார்பில் வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளார். இதற்கிடையே தான் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடின.
பிரதமர் நரேந்திர மோடி ராஜ்யசபாவில் உரையாற்றினார். ராஜ்யசபா எம்பியாக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பலரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி மன்மோகன் சிங்கை பாராட்டி ராஜ்யசபாவில் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி பிரதமர் மோடி பேசியதாவது:
டாக்டர் மன்மோகன் சிங்கின் நாட்டுக்கான பங்களிப்பு மகத்தானது என்பதை நான் இன்று நினைவுகூர விரும்புகிறேன். இவ்வளவு காலம் அவர் நாடாளுமன்றம் மற்றும் நாட்டையும் வழிநடத்திய விதம் உள்ளிட்டவற்றுக்காக என்றென்றும் நினைவில் வைக்கப்படுவார். அவரது அர்ப்பணிப்பான பணிக்காக பாராட்டுகிறேன். நாடாளுமன்றத்தில் மசோதா மீதான ஓட்டெடுப்பில் வீல்சேரில் வந்து அவர் ஓட்டளித்தார்.
இதன்மூலம் ஒரு எம்பியாக அவர் தனது கடமையை ஆற்றி ஜனநாயகத்துக்கு பலம் சேர்த்தார். அந்த ஓட்டெடுப்பில் ஆளும் கட்சி வெல்லும் என்பது தெரிந்தும் கூட மன்மோகன் சிங் வந்து தனது கடமையை செய்தார். எம்பியாக ஒருவர் தனது கடமையில் விழுப்புடன் இருந்ததற்கு இது சிறந்த உதாரணம்.'' என கூறினார்.
இதையடுத்து ராஜ்யசபாவில் இருந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்தனர். அதாவது கடந்த ஆண்டு மத்திய அரசு சார்பில் யூனியன் பிரதேசமான டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆம்ஆத்மி உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தன. இந்த வேளையில் மன்மோகன் சிங் வீல்சேரில் வந்து மசோதாவை எதிர்த்து ஓட்டளித்தார். இதனை தான் பிரதமர் மோடி குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.
முன்னதாக இன்றைய தினம் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்கள் பிரதமர் மோடி, ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் இன்று மாலையில் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தனது இல்லத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு விருந்து வழங்கி பிரியா விடை அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications