"பிஎம்.கேர்ஸ்".. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு.. பலன்களை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி
குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை பிரதமர் மோடி வழங்குகிறார்
டெல்லி: குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி வழங்குகிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பினால், இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டது.. பலர் உயிரிழந்தனர்.. பொருளாதார நிலை தடுமாற்றம் கண்டது.
எனவே, தொற்று பாதிப்பின் தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, 'பிஎம் கேர்' என்ற நிதியுதவிக் கணக்கு தொடங்கப்பட்டது.

பாதுகாவலர்
அதாவது, தொற்று காரணமாக, பெற்றோர்கள் இருவரையோ, அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் மே 29, 2021 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

குழந்தைகள் ஆரோக்கியம்
இதில், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் சாமானியர்கள் என அனைவரும் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்தனர். குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும் உதவித்தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

பயன்கள்
அதேபோல, குழந்தைகளை பதிவு செய்வதற்காக http://pmcaresforchildren.in/ என்ற தளம் தொடங்கப்பட்டது. ஒப்புதல் நடைமுறைகளுடன் குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளை வழங்கும் ஒற்றை சாளர அமைப்புமுறையாக இந்த தளம் செயல்பட்டும் வருகிறது.. அதன்படி, குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி வழங்குகிறார்... பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் மோடி அளிப்பார்.

நிதி செலவு
இந்நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.. முன்னதாக, இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி பெறப்பட்டது, எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், இது மத்திய அரசின் பொதுத் திட்டம் கிடையாது. அதனால், தகவல்களை வெளியிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications