டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு! வரி மிரட்டலுக்கு நடுவே விவாதித்தது என்ன? முக்கிய தகவல்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசி உள்ளார். ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்து சென்றது, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பாஸ்மதி அரிசிக்கு கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்த விவகாரம் உள்ளிட்டவற்றுக்கு நடுவே இந்த தொலைபேசி உரையால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த உரையாடலின்போது இருவரும் பேசியது என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இது போதாது என்று நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பாஸ்மதி அரிசிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இந்தியா தனது பாஸ்மதி அரசியை அமெரிக்காவில் கொட்டிவிட்டு செல்கிறது. இதனால் வரி விதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

இதனால் இந்தியாவின் அரிசி ஏற்றுமதியை குறிவைத்து டிரம்ப் வரி விதிக்க போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்யா உடனான வர்த்தக உறவை துண்டிக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் நம் நாடு அதனை கண்டுக்கொள்ளவில்லை. இதற்கிடையே தான் ரஷ்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்து சென்றார்.
இது நடத்த பிறகு தான் டொனால்ட் டிரம்ப் பாஸ்மதி அரிசி விவகாரத்தை கையில் எடுத்து கூடுதல் வரி விதிப்பதாக மிரட்டி வருகிறார். இதற்கிடையே தான் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்த நிலையில், இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாகிவிட்டது. முந்தைய காலத்தை விட இருநாடுகளும் நெருங்கி செயல்பட தொடங்கி விட்டது.
இதற்கு டொனால்ட் டிரம்ப் தான் முக்கிய காரணம். இந்தியா - அமெரிக்கா உறவை டிரம்ப் சிதைத்துவிட்டார். இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்படுத்திய பெருமை டிரம்புக்கு தான் சேரும் என்று அமெரிக்காவின் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறி வருகின்றனர்.
இது டிரம்புக்கு இன்னொரு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் பேசி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் இருநாட்டு வர்த்தக உறவு பற்றி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு சீர்க்குலைந்துள்ளது. டிரம்ப் நமக்கு 50 சதவீத வரி விதித்தது தான் இதற்கு காரணம். மேலும் இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் விரைவில் தீர்வு எட்டுவது பற்றி இருவரும் விவாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் இருநாடுகளின் உறவை இன்னும் விரிவுப்படுத்துவது பற்றி இருவரும் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரதமர் மோடி, டொனால்ட் டிரம்ப் உடன் நடந்த பேச்சுவார்த்தை பற்றிய பதிவில் வர்த்தகம் பற்றிய விவரங்களை குறிப்பிடப்படவில்லை. அதேவேளையில் உரையாடல் சிறப்பானதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛அதிபர் டிரம்புடன் சுவாரஸ்மான உரையாடலை மேற்கொண்டேன். இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் பற்றி நாங்கள் பேசினோம். பிராந்தியம் மற்றும் சர்வதேச நிலவரங்கள் பற்றி இருவரும் விவாதித்தோம். உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும்'' என்று கூறியுள்ளார்.
இந்த பதிவில் டொனால்ட் டிரம்பின் எக்ஸ் வலைதள கணக்கை பிரதமர் மோடி டேக் செய்துள்ளார். இருப்பினும் அமெரிக்கா - இந்தியா இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையில் டிரம்ப் - மோடி இடையே நடந்த தொலைபேசி உரையாடல் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications