இன்று ஒரே நாளில் 7 முக்கிய மீட்டிங் நடத்தும் பிரதமர் மோடி! கன்னியாகுமரி அமைதிக்கு பிறகு "புயல்"
டெல்லி: நமது நாட்டில் லோக்சபா தேர்தல் நேற்று தான் நடந்து முடிந்த நிலையில், பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் 7 ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
நமது நாட்டில் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை முதலே எக்ஸிட் போல் சர்வேக்கள் வெளியாகி வருகிறது. அதில் பெரும்பாலான சர்வேக்களில் பிரதமர் மோடி தனது ஆட்சியைத் தக்க வைப்பார் என்றே கூறப்பட்டுள்ளது.
தியானத்திற்குப் பிறகு: ஆனால், பிரதமர் மோடி இதைப் பற்றியெல்லாம் எந்தவொரு கருத்தும் கூறவில்லை. நேற்று தனது 3 நாள் தியானத்தை முடித்துக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, சத்தமே இல்லாமல் அடுத்தடுத்து மீட்டிங்களை நடத்தத் தொடங்கிவிட்டார்.
இன்று பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார். லோக்சபா தேர்தலில் மோடி வென்று ஆட்சியைத் தக்க வைப்பார் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமையும் அரசு முதல் 100 நாட்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார். பிற்பகலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
ஏழு கூட்டம்: இன்று மட்டும் தொடர்ந்து ஏழு கூட்டங்களுக்குப் பிரதமர் மோடி தலைமை தாங்குவார் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர். ரெமல் புயல் வடகிழக்கு மாநிலங்களில் மோசமான சேதத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்துத் தான் முதல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் அவர் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அதீத வெப்பத்தால் ஏற்பட்ட வெப்ப அலையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே நாடு முழுக்க வெப்ப அலையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் அதன் நிலைமையை ஆய்வு செய்யவும் பிரதமர் மோடி மற்றொரு கூட்டத்தை நடத்துகிறார்.
என்ன மீட்டிங்: லோக்சபா தேர்தல் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு மறுநாள் அதாவது ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் சுற்றுச்சுழல் குறித்து விழிப்புணர்வை நடத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. அது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசிக்க இருக்கிறார்.
பிறகு மோடி 3.0 அமையும் போது முதல் 100 நாட்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த 100 நாள் அஜெண்டா குறித்து ஆலோசிக்க மற்றொரு மீட்டிங் நடக்கிறது. இதையும் பிரதமர் மோடி தான் தலைமை தாங்குகிறார். இது தவிர வேறு சில ஆலோசனைக் கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இன்று மட்டும் அவர் ஏழு கூட்டங்களை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கை: லோக்சபா தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை நிச்சயம் தக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் பிரதமர் மோடி இருப்பதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே தேர்தலுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications