2 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கொரொனா 3-வது அலை பல மாநிலங்களில் அதி உச்சமாக கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு சுமார் 2 லட்சத்தை நெருங்கி உள்ளது.

இந்திய நிலவரம்
நாட்டில் இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேர நிலவரப்படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,94,720 ஆக இருந்தது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 442. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியது. அதாவது இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,55,319 ஆக இருந்தது.

ஓமிக்ரான் பாதிப்பு
இன்று காலை நிலவரப்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 28 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஓமிக்ரான் தொற்று 4,868 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 1,805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,281 பேருக்கும், ராஜஸ்தானில் 645, பேருக்கும் ஓம்கிரான் தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 499 பேரும், ராஜஸ்தானில் 402 பேரும், குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்
நேற்று ஒரே நாளில் 85 லட்சத்துக்கும் அதிகமாக (85,26,240) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை நிலவரப்படி 153.80 கோடியைக் (1,53,80,08,200) கடந்தது. வாராந்திரத் தொற்று 9.82 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 11.05 சதவீதமாக பதிவாகியுள்ளது.

முதல்வர்களுடன் ஆலோசனை
முதல்வர்களுடன் ஆலோசனை நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அல்லது வார இறுதி நாட்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் நாட்டின் கொரோனா நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிகள் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவை தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.












Click it and Unblock the Notifications